நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை வினைப்பய னல்லாற் பிற – நாலடியார் 105

இன்னிசை வெண்பா

தினைத்துணைய ராகித்தந் தேசு(உ)ள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற. 105

- பழவினை, நாலடியார்

பொருளுரை:

பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத்து இருக்கின்றனர்;

இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!

கருத்து:

முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.

விளக்கம்:

தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின.

எவனுண்டாம் என்பதில், ‘ஆம்' அசைநிலை. பிற, வேறு என்னும் பொருட்டு,

தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-21, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே