பயன்இன்றே தான்நோன் றிடவரும் சால்பு - பழமொழி நானூறு 19

நேரிசை வெண்பா

கறுத்(து)ஆற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்(து)ஆற்றிச் சேறல் புகழால் - ஒறுத்(து)ஆற்றின்
வான்ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன் றிடவரும் சால்பு. 19

- பழமொழி நானூறு

பொருளுரை:

வானளவு உயர்ந்த பெரிய மலைகளை உடைய வெற்பனே!

ஒருவன் பொறுக்கும் பொறையினால் வருவது அவனது குணம்; ஆகையால், சினம் மிகக்கொண்டு தமக்குத் தீய செயல்களைச் செய்தாரை, அவர் தீச்செயல்களைப் பொறுத்து அவர்க்கு நன்மை செய்து ஒழுகுதல் புகழாகும்;

கோபித்துத் தாமும் தீய செய்கைகளைச் செய்தால் அதனால் புகழ் உண்டாதல் இல்லை.

கருத்து:

தீங்கு செய்தார்க்கு நன்மை செய்தல் வேண்டும்.

விளக்கம்:

'பயன் இன்று' என்றது கோபித்துத் தீயசெயல்களைச் செய்தலால் வென்றோம் என நினைத்தல்,

அப்பொழுதைக்கு இன்பமாகத் தோன்றினும் எஞ்ஞான்றும் நிற்பதாய புகழ் இல்லை என்பதைக் கருதியேயாம்.

'தான் நோன்றிட வரும் சால்பு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-21, 8:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே