தாமறிவர் தாங்கண்ட வாறு – திரிகடுகம் 36

இன்னிசை வெண்பா

ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
காமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு 36

- திரிகடுகம்

பொருளுரை:

ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்று உயிர்களிடத்தில் தயவுடையோம் என்று சொல்வானும்,

தான் யாதொரு முயற்சிக்கும் உடன்படாமல் ஊழ் எல்லாம் செய்யும் என்கிறவனும்;

ஒரு பயனைப்பெற வேண்டிச் செய்ய விரும்புகின்ற யாகத்தில் ஓருயிரைக் கொலை செய்வானும் ஆகிய இம் மூவரும் தாங்கள் எண்ணத்திற்கேற்றபடி தாங்கள் அறிந்தவராவர்.

கருத்துரை:

தன் உடலைப் பெருக்கும் விருப்புடன் உயிரைக் கொன்று தின்றும் எனக்கு உயிர்மீது இரக்கமுண்டு என்று பகர்வதும், எல்லாம் விதியினால் வருகிறதென்று சொல்லிச் சோம்பி இருப்பதும், இம்மைப் பயன் கருதிச் சில சடங்கு செய்து உயிரைக் கொல்வதும் நூல்களின் உண்மை யுணராதவர் செய்கைகளாம்.

விளக்கம்: வினை - ஊழ்; முன்வினைப்பயன்.

காமுறு வேள்வியாவது - தான் விரும்பிய பொருளை அடையும் பொருட்டுச் செய்யப்படும் யாகம்.

அறநூலின் கருத்தை அறிவுடையோர்பாற் கேட்டு உண்மை உணர்ந்திலராதலால், தாங் கண்டவாறு தாம் அறிவர் எனப்பட்டது. ஆக்கும் என்ற குறிப்பால் வினை ஊழை உணர்த்தியது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே