கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி - நீதிநெறி விளக்கம் 34

இன்னிசை வெண்பா

கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்(கு)
உண்டோ உணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி
தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ
பேரா பெருமூச் செறிந்து 34

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

மிகுந்த நெருப்பு தன்னைச் சூழ்ந்து எரிந்தாலும் பெரியபாம்புகள் பெருமூச்சு விட்டுக்கொண்டு: அவ்விடத்தினின்றும் அசையாது தூங்கிக் கொண்டிருக்கும்;

அதுபோல, தமக்கு வருங் கெடுதிகளை நேராகவே பார்த்தார்களானாலும் கீழ்மையான குணம் கொண்ட மக்களுக்கு அவற்றினின்றுந் தப்பிப் பிழைக்கும் உணர்ச்சி உண்டோ? இல்லையாகும்.

விளக்கம்:

கண்கூடு: கண்ணுக்குக் கூடுவதான கண் பார்வையை யுணர்த்திற்று.

மண்டெரி பெருந்தீ என்பது நளவெண்பா. வாய்மடுத்தல் – உண்ணுதல்,

கருத்து:

எத்துணைக் கெடுதி வருவதாயினும் கீழ்மக்கள் மீண்டும் மீண்டுந் தீயசெயல்களையே செய்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 8:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே