குலவிச்சை கல்லாமல் பாகம் படும் - பழமொழி நானூறு 21

நேரிசை வெண்பா

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும். 21

- பழமொழி நானூறு

பொருளுரை:

வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன் சிறுவயதினன் என்றிகழ்ந்த நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி,

நரைமயிரை முடியுடன் முடித்து வந்து அவர்கள் கூறிய சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன்;

தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிது அமையும்.

கருத்து:

குலவித்தை கல்லாமலே அமையும்.

விளக்கம்:

உரை - சொல். இருதிறத்தாரும் உரைத்தலின் உரை, வழக்கு எனப்பட்டது.

குற்றமுடையாராய்த் தண்டிக்கப்பட்டோரும், அரசன் வழக்கினை ஆராய்ந்து நீதி கூறி அறிவு கொளுத்தும் முறையைக் கண்டு, மனச் செம்மை யுடையராய் மகிழ்வெய்துவார்கள் என்பார், 'நரைமுதுமக்கள் (இருவரும்) உவப்ப முறைசெய்தான்' என்றார்.

சாட்சிகள் முதலிய பிற காரணங்கள் கொண்டு ஒரு வழக்கினை முடிவு செய்தலினும் வழக்குடையோர் சொற்களைக் கொண்டே தீர்ப்புக் கூறுதல் மிகவும் நுண்ணுணர்விற்று.

முறைசெய்தல் - ஒருபாற் கோடாது கோல் ஓச்சுதல்.

(1) உரைமுடிவுகாணான், (2) இளமையோன் என்ற இரண்டு குறைகளையும்,
(1) சொல்லாலும், (2) நரை முடித்தலாலும் நிறைவு செய்தான்.

'குலவித்தை கல்லாமலே உளவாம்' என்பது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Oct-21, 6:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1601

மேலே