என் வாழ்க்கை ஒரு வெற்றிகரமான தோல்வி

யார் இந்த மனிதன், சுழி சரியாக இல்லாமல் வாழ்க்கை சுழியில் அகப்பட்டு சுழல்கின்றவன்?
ஏன் இவன் பிறப்பு , இறுதலைக் கொள்ளி எறும்பு போல் அல்லல்கள் உற்று அமைதி இல்லாமல் அலைவதற்கு?
எதற்காக பிறந்தான் இவன், இளமை பருவம் இனிக்காமல் கசக்க, பருவகாலம் பரிதாபமாக முறைக்க, முதுமை முன்னேறி இவனை பின் தள்ளி தாக்க?
எப்படி இவன் வளர்ந்தான், ஆறடி உயர்ந்தான், சிறு அளவில் சிறந்தான், எவருடனும் ஒன்றாத கிரகமாக, ஆனாலும் நவக்கிரகங்களில் ஒன்றாக?
ஏன் இவனை இரண்டு பேராக, இரண்டு வினாடி இன்பத்திற்காக, பெற்று போட்டார்கள் 'எதற்காக உன்னை பெற்றெடுத்துபோட்டோம் ' என்ற காரணத்தை இவனுக்கு சொல்லாமல்?
ஒன்றும் இல்லாத ஏழையாக பிறந்திருப்பின், ஒன்றும் சொல்லாமல் வாழ்ந்திருப்பானே, சொல்ல தெம்பு கூட இல்லாமல்!
ஒன்றும் தேவை இல்லாத மனிதனாக பிறப்பெடுத்திருந்தால், ஆகி இருப்பானே, மனிதரே நடமாடாத ஒரு மூலையில், முற்றும் துறந்த முனிவனாக!
நல்ல புத்தியை கொடுத்திருந்தால், இவன் நாட்டுக்கு கொஞ்சம் நன்மை செய்திருப்பானே!கூர்மையான கத்தியை கொடுத்திருந்தால், இளநீர் வியாபாரம் செய்து தேநீர் குடித்து சுகமாக பிழைத்திருப்பானே!
செல்வத்துடன் படைத்திருந்தால், எவ்வளவோ ஏழைகளை வாழ வைத்திருப்பானே!எல்லோருடனும் ஒத்துப் போகும் மனம் கொடுத்திருந்தால், கண்டவரை எல்லாம் கொண்டிருப்பானே, அவர்கள் மனம் வென்றிருப்பானே!
இவனுக்கு கொஞ்சம் நல்ல நேரத்தை அள்ளி கொடுத்திருந்தால், திறமைகளை திறம்பட வெளிக்காட்டி இருப்பானே!எதுவும் இல்லை என்றாலும் சுதந்திரம் தந்து படைத்திருந்தால், மனம் போன போக்கில் அநுபவித்து வாழ்ந்திருப்பானே!
போகட்டும், ஒரு திரை மற்றும் நாடக நடிகனாய் நடிக்கும் பேறு பெற்றிருந்தால், தேகத்தில் உள்ள தாகங்களை கொட்டி , உள்ளத்தின் உள்ளத்தில் உறுமும் பாவனைகளையும் குமுறும் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்பியிருப்பானே!
அப்படியம் இல்லை இப்படியும் இல்லை என்று உருப்படியாக இல்லாமல் சவுக்கடி மட்டும் படாமல் படும் நெருக்கடி நிலை எதற்கு இருந்தும் இல்லாமல் இருக்கும் இந்த மாயாவி மனிதனுக்கு?
எட்டு உடன் பிறந்தோரைக் கொண்டும், ஒட்டாமல், ஒன்பது திசைகளைத் தவிர வேறு திசை ஏதாவது இருக்கிறதா என்று ஏன் தட்டாமல் தட்டி கேட்டு தவிக்கிறான், எட்டாமல் எட்டி தவிக்கிறான் தினம் காலை எட்டு முதல் மாலை எட்டு வரை ?
படிப்பு இருந்தும் படிப்பு அறிவு இல்லாத ஒருவனாக, படித்த போதையாக , இவன் இவ்வுலக வாழ்க்கை புத்தகத்தை வாங்கி படிக்காமல் ஏன் விட்டு விட்டான்?
படிப்புக்கு ஏற்ற உத்தியோகம் கிடைத்தும் ஏன் இவன் உத்தியோகத்தை உத்தமமாக செய்யாமல் பிற ஊழியர்களுடனும் சேர்ந்து ஒரு குழுவாக பணி புரியாமல், கருப்பு சந்தையில் ஒரு வெள்ளாடாக, மொத்தத்தில் புரியாத புதிராகவே இருந்துவிட்டான்?
ஏன் நண்பர்களை சம்பாதிக்கும் ராசியை எடுத்துவிட்டு, இருக்கும் நண்பர்களை எல்லாம் காற்றில் விட்டு விடும் கொடுமையான சதியை விதி இவனுக்கு செய்தவண்ணம் இருக்கிறது ?
கொடுக்கும் அரிய மனம் இருப்பினும், கெடுக்கும் உள்ளம் இல்லாதிருப்பினும், கொடுமைகளை தடுக்கும் சிந்தனை இருப்பினும், நகைச்சுவையை வெளிக்காட்டும் கற்பனை இருப்பினும், இவனை ஒன்றுக்கும் உதவாதவனாக படைத்தது போட்டது எவ்வாறு அடுக்கும்?
இவனுடைய ஏக்கத்தை கூட்ட, பெருக்க, வகுக்க ஒரு நொடி கூட எந்த விதி பயலும் சிந்திப்பதில்லை. ஆனால் இவனது குறைந்த தூக்கத்தை இன்னும் குறைக்க இவனின் கொடிய விதி இரவு முழுதும் தூங்காமல் இவனை சதைக்கிறதே, என்ன செய்வான் இந்த அப்பாவி மனிதன்?
அறுபது வயது வரை வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று அறியாமல் வாழ்ந்து தேய்ந்து , தற்போது மீதி இருக்கும் வாழ்வை நிம்மதியாக கழிக்கலாம் என்று நினைக்கும்போது, மீதி உள்ள பிரச்சினைகளை இவன் உடலுக்கும் உள்ளத்திற்கும் தூவி விட்டுக்கொண்டிருக்கும் விதி என்னும் நேரத்தை என்ன தான் சொல்லி போற்றுவது இல்லை தூற்றுவது?

கனவு கலைந்த பின்:

இயற்கையே, விதியே, சதியே, மதியே, என் வாழ்வின் கதியே, உன்னுடைய இவ்வளவு குறைகளை கண்ட குறைபாடுள்ள நான் இதையும் குறைவில்லாமல் கூற கடமை பட்டிருக்கிறேன்!
வாழ்க்கையில் இவ்வளவு நீ என்னை அடித்தாலும், ஒரு போதும் என் வயிற்றில் அடித்ததில்லை , அதனால் பசியால் துடித்ததில்லை!
ஏனோ தானோ என்று ஒருத்தியை வாழ்க்கை துணைவியாக தராமல் உயர்ந்த பண்புகள் கொண்டு என்னை உள்ளதால் நேசிக்கும், உயர்தர சைவ சமையலை அமுதாக படைக்கும் மனைவி அமைய பெற்றிப்பது நான் பூர்வ ஜென்மத்தில் செய்த ஏதோ ஒரு நல்ல செயலால்தானோ!
பல பலங்கள் எனக்கு குறைவாக இருப்பினும், பண பலம் எனக்கு பெரிய வீக்கமாக அமையவில்லை! உண்ண உடுத்த உறைய பணம் கொடுத்ததால் தான், நான் பணத்தையும் பலனையும் எதிர்பாராமல் என் மன கற்பனைகளையும், வாழ்க்கை நிகழ்வுகளையும் இதை போன்ற தளங்களில் பரிமாறுகிறேன்!
தோல்விகள் பல என்வாழ்வில் நிகழ்ந்தாலும் அவற்றில் பலவற்றை நான் கண்டதே இல்லை, ஏனெனில் என் வாழ்வில் நான் கண்ட தோல்விகள் பல வெற்றிகரமான தோல்விகளே!
என் மனக்குமுறலையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த எனக்கு கிரியாவூக்கி என் மன தைரியம் தான், ஊக்கமூக்கி துணிச்சல் தான்!
வாழ்க்கையில் எவ்வளவு தோல்விகள் வேண்டுமானாலும் வரட்டும், தைரியமாக சந்தியுங்கள், ஆனால் தைரியத்தையும் துணிச்சலையும் இழந்து விடும் தோல்வியை காணமட்டும் எந்த ஒரு தோல்வியிலும் ஒரு நொடியும் கூட சிந்திக்காதீர்கள்!

ஆனந்த ராம்

எழுதியவர் : (29-Oct-21, 7:02 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 304

மேலே