செய்த வினைவிளைவை நுகரவே மன்னுயிர்கள் திரிகின்ற போகம் - பிறப்பு, தருமதீபிகை 904

நேரிசை வெண்பா

செய்த வினைவிளைவைச் சேர்ந்து நுகரவே
வையமுதல் வானமெலாம் மன்னுயிர்கள் - மெய்கள்
அடைந்து திரிகின்ற அப்போகம் தீர்ந்தால்
உடைந்து மறையும் ஒருங்கு. 904

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாம் செய்த வினைப் போகங்களை நுகர்ந்து கழிக்கவே பூதலம், மீதலம், பாதலம் முதலாக யாண்டும் உடல்களை மருவி உயிர்கள் திரிந்து வருகின்றன; அவை முடிந்து போனால் இவை யாவும் ஒருங்கே மறைந்து உரிமையில் கலந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறவிகள் காரண காரியத் தொடர்புகளாய் வந்துள்ளன. வித்திலிருந்து பயிர்கள் தோன்றுதல் போல வினைகளிலிருந்து உயிர்கள் தோன்றி எவ்வழியும் நீண்டு நிலவுகின்றன.

விரிந்து பரந்துள்ள தோற்றங்கள் யாவும் முன்பு புரிந்த வினைப்பயன்களையே யாண்டும் அருந்தி வருகின்றன. அவ்வாறு அருந்துங்கால் நினைந்து பேசி விழைந்து செய்த செயல்களே மீண்டும் வினைகளாய் நீண்டு நிற்கின்றன. அந்நிலைகளுக்குத் தக்கவாறு மறுபடியும் பிறவிகள் பெருகி வருகின்றன.

பிறப்பு அடியோடு நீங்க வேண்டுமானால், அதற்கு மூல வித்தான வினைத்தொடர்பு முழுதும் தொலைய வேண்டும். பொல்லா விருப்பு ஒன்று போய்த் தொலையின் அன்றுதான் எல்லாப் பிறப்பும் இறந்து ஒழியும். இவ்வாறு தெளிந்த ஞானம் உதயமாகும் பொழுதுதான் பிறவியை நீக்க விரைந்து ஞானிகள் துறவிகள் ஆகின்றார். உள்ளம் தெளிந்தவர் உய்தி பெறுகின்றார்.

அல்லலான பிறவி யாண்டும் துக்கமே என்று உணர்ந்த அன்றே கவுதமர் அரசைத் துறந்து இரவே அடவியை அடைந்தார். தத்துவ ஞானத்தால் சித்த சாந்தி அடைந்து உத்தம நிலையில் ஒளி வீசி நின்ற அவரே புத்தர் எனப் பொலிந்து விளங்கினார். மருள் நீங்கி மன்னுயிர் உய்ய அருளோங்கிய அதிசய சோதி என உலகம் உவந்து அவரைத் துதிசெய்து வருகிறது.

செல்வங்கள் பலவும் நிறைந்து சிறந்த போகங்களை நுகர்ந்து உல்லாசமாய் உவந்திருந்த அரசன் ஒருநாள் பொல்லாத பிறவித் துயரை உணர்ந்தான்; உள்ளம் கலங்கி உறுதியை நாடித் துறவியாய் எழுந்தான். அந்த வேந்தனுடைய நிலையை அறிந்ததும் நகர மாந்தர் யாவரும் மறுகி மயங்கி அவனைத் தொடர்ந்து உருகி அழுது உரிமையோடு தடுத்தார். அப்பொழுது அவரை நோக்கி அம்மன்னன் ஆறுதலாய்க் கூறிய மொழிகள் அரிய ஞான ஒளியை வெளியே வீசி வந்தன. சில அயலே வருவன காண்க.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அவரவர் வினையின் அவரவர் வருவார்;
அவரவர் வினையள வுக்கே
அவரவர் போகம்; என்றதே ஆயின்
ஆருக்கார் துணையதா குவர்கள்?
அவரவர் தேகம் உளபொழு(து) உடனே
ஆதர(வு) ஆரென நாடி
அவரவர் அடைதல் நெறிகன்மத்(து) அடையும்
ஆதர(வு) ஆதர வாமோ?

வினையுள அளவும் கூடியே.நிற்கும்
வினையகன் றிடின்பிரிந் திடுமால்
வினையினால் வருமா தரவினின் இயற்கை
மெய்யுணர்(வு) அத்தகை யலவே
வினையிலை உங்கள் இடத்தில்நான் இருக்க
மெய்யுணர்(வு) ஒன்றையே நாடி
வினையறு கானம் புகுதவே வேண்டி
விரும்பினேன் நீர்நிலும் இங்ஙன். – மகாராச துறவு

வினையின் விளைவுகளை இவை விழி தெரிய விளக்கியுள்ளன. மனைவி, மக்கள், ஒக்கல் எனப் பக்கம் சூழ்ந்து குழுமியுள்ளது மாயக் கூட்டமே; வினையுள்ள அளவும் கூடியிருந்து அது முடிந்தவுடனே யாவும் பிரிந்து போய்விடும்; பிறவி வினையினால் வருகிறது; வினை மன நினைவால் விளைகிறது; ஆகவே துறவியாய் மனத்தை அடக்குவதே பிறவியை நீக்கவுரிய வழியாம் என அரச முனிவர் இங்கே உணர்த்தியிருக்கிறார். அரிய ஞான நிலை மருவியுள்ள இந்த உரைக் குறிப்புகள் ஊன்றி உணரத் தக்கன.

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே. – சிவபுராணம், திருவாசகம்

வினைப் பிறவி சாராதிருக்க வேண்டின் புலக்குரம்பை அடக்கி மனத் துறவை மருவியிருக்க வேண்டும் என இறைவனைத் துதிக்கும் முறையில் மாணிக்கவாசகர் இங்ஙனம் அருளியிருக்கிறார்.

புலையான பிறவியில் புகுந்தால் அலைவாய்த் துரும்பு போல் யாண்டும் அல்லலாய் நீண்ட கவலையால் அலமந்து அலைய நேரும்.

தரவு கொச்சகக் கலிப்பா

ஓரிடத்தோர் உயிர்நெடுநாள் உறைவதிலை; உததியெனும்
நீரிடத்துப் புரிவினையால் நிலையிலுடம் பிதுபோனால்
பாரிடத்தில் சுவர்க்கத்தில் பவர்க்கமதில் எங்கெனினும்
சேரிடத்தில் சேருமிது திண்ணமெனத் தெளிந்திடுதி. – சேது புராணம்

பிறப்பில் வீழ்ந்த உயிர்கள் இவ்வாறு நெடுந் துயரங்கள் தோய்ந்து நிலை குலைந்து உழலுகின்றன; ஆகவே துன்பப் பிறவி நீங்குவதே எவ்வழியும் பெரிய இன்பப் பேறாய் ஓங்கி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Oct-21, 2:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே