ஐரோப்பிய நாடுகளின் பெண்களில் பெரும்பாலானோர் ஏன் குதியுயர் காலணிகள் அணிகிறார்கள்

"ஐரோப்பிய நாடுகளின் பெண்களில் பெரும்பாலானோர் ஏன் "குதியுயர் காலணிகள்" அணிகிறார்கள்?"

ஆஹா! அருமையான கேள்வி நண்பரே!

இதை அந்தப் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்! சற்றுக் கர்வத்துடன் பதில் வரும்:

"உயரமான பெண்களை, அல்லது "உயரமாகத் தெரியும் பெண்களை", ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஒரு பெரிய ஆய்வு தெரிவிக்கிறது! அத்துடன் எங்கள் அநுபவத்திலும் நாங்கள் பார்த்திருக்கிறோம்! உயரமாக இருந்து, நிமிர்ந்து நடந்தாலே அது கொஞ்சம் அதிகக் கம்பீரத்தை நமக்குத் தருகிறது! எல்லாவற்றையும் விட உயர்ந்த உருவம் ஆளுமையின் அடையாளம் தெரியுமா?" இன்னும் சற்று நேரம் பேசினால், இன்னும் கொஞ்சம் அசமஞ்சத் தனமாகப் பல ஆதாரங்களை அவர்கள் காட்டுவார்கள்!

இவர்களுக்கு, நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அம்மையார்,
முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ்,
ஸ்ரீலங்க்காவின் சிரிமாவோ திருமதி. சிரிமாவோ பண்டார நாயகா,
இஸ்ரேலின் முன்னாள் அதிபர், திருமதி. கோல்டா மியர்,
வங்காள தேசத்தின் அதிபர், திருமதி. கலிதா ஜியா,
ஜெர்மெனியின் ஆளுநர், திருமதி. ஆஞ்செலா மெர்க்கெல்,
இந்தோனேஷியாவின் சர்வாதிகாரிச்சி திருமதி. இமெல்டா மார்க்கோஸ்,
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திருமதி. மார்கரெட் தெரஸா என்று பலபேர்,
உண்மையாகவே ஆளுமையும் ஆட்சியும் கொண்டிருந்த பெண் தலைவர்கள் பலபேர்,
எல்லாரும் மிகவும் குட்டையானவர்கள்தான் என்பதைக் கண்டு கொள்வதில்லை!!

இந்தத் தலைவர்களில் யாரும் இவர்களைப் போல் குதியுயர் செருப்பு மாட்டிக் கொண்டு தங்கள் உயரத்தையும் அதன்மூலம் ஆளுமையையும் கூட்டிக் கொள்ள முயலவில்லை என்பதையும் கண்டு கொள்வதில்லை!!
மேலே உள்ள படத்தைப் பாருங்கள்! இத்தனை ஆண்களும் ஆறேகால் அடிக்கும் மேல் உயரமுள்ள பன்னாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள்! இவர்களுக்கு மத்தியில் நமது முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் பாருங்கள்! மலைப்பாக இருக்கிறது இல்லையா? எல்லாரையும் விட அவர் சுமார் ஒன்றரை அடி குறைவான உருவம் உடையவர்! இந்தப் பெண்கள் சொல்வதைப் போல் அவரும் குதியுயர் செருப்பை மாட்டிக் கொள்வதாக இருந்தால், இரண்டடிக்கும் அதிகமாக அதன் குதி இருக்க வேண்டும்!!

அமெரிக்காவையும் அதன் அன்றைய அதிபர் கென்னடியையும் தன் காலடியில் போட்டு அழுத்திக் கொண்டிருந்த கவர்ச்சி நடிகை மெர்லின் மன்றோவும் குட்டையானவள்தான். அந்நாள் ஹாலிவுட்டின் அரசியாக இருந்த பெரிய நடிகை சோஃபியா லொரென், கவர்ச்சிப் பெண் நடிகை ஜீனா லோலா ப்ரிகிட்டா, எல்லிஜபெத் டாய்லர் ஆகியோரும் குட்டையானவர்கள்தான். இவர்கள் எல்லாரையும் விட,உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் முத்திரைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அங்கெல்லாம் தன் முத்திரையையும் பதித்திருக்கும் இங்கிலாந்து ராணி எல்லிஜபெத் மிகவும் குட்டையான சிறிய உருவம் கொண்டவள்தான்!

நிலைமையும் உண்மையும் இவ்வாறு இருக்கம் உண்மையாகவே, குதியுயர் செருப்பு அமேரிக்க ஐரோப்பிய நாடுகளில் அவ்வளவு தூரத்திற்கு ஏறத்தாழக் கட்டாயமான ஒன்றாக இருக்க என்னதான் காரணம்?

பெண்கள் என்னவோ அது அவர்களின் "ஆளுமை" யைக் கூட்டுவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால்,ஆண்கள்தான் இதை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள்!
பத்தாம் நூற்றாண்டு வாக்கில், அப்போதைய பாரசீகம் (இப்போதைய ஈரான்) நாட்டில்தான் முதன் முதலில் இந்த "உயர்குதிக் காலணி" அறிமுகம் ஆனது.

ஆரம்ப காலத்தில் குதிரையேற்றத்தின் போது, சேணக் கால் மிதியில் இருந்து பாதம் வழுக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக இதை அவர்கள் தம் காலணிகளில் பொருத்திக் கொண்டார்கள். அத்துடன், போரிடும் போது சேணத்தின் மீது நின்றபடியே வில்லைப் பயன்படுத்தும் போது கால்மிதியில் இருந்து கால்கள் நழுவாமல் இருக்கவும் இவை பொருத்தப் பட்டன. துவக்கத்தில், இவை தேவைப் படும் போது மாட்டிக் கொள்வதற்கேற்ப இருந்தன. ஆனால் அவை அடிக்கடி கழன்று விழுந்ததால் அவற்றை நிரந்தரமாக இணைத்துச் செய்தார்கள்.

அப்போதுதான் குதிரைச் சவாரி செய்தவர்கள் அதில் இருந்து இறங்கியதும் வேகமாகவும் இயல்பாகவும் நடக்க இந்த "குதியுயர் காலணிகள்" மிகுந்த தடையை ஏற்படுத்துவதையும் திடீரென்று பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு கீழே தள்ளியதையும் ஈர மண்தரையில் சிக்கிக் கொண்டு நிலை தடுமாற வைத்ததையும் உடல் சமநிலையை வெகுவாகக் குலைத்ததையும் இயல்பான நடையை அடியோடு மாற்றி, ஒருவிதமான "ஆணிக்கால் நடையும் வாத்து நடை" யும் கலந்த "தத்து நடை" யை வரவழைத்ததையும் கவனித்தார்கள்!

ஒரு மூன்றங்குல மரக் கட்டை இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தியதைப் பார்த்து மிகவும் வியந்தார்கள்! வேக நடைக்குக் காரணமான முழங்கால் மடிவதும் முன்னோக்கி வீசப் படுவதும் அந்த உயர்குதிகளால் தடுக்கப் பட்டன!

உயர்குதி இல்லாத காலணிகளை மாட்டிக்கொண்டால், முழங்கால்களை மடிக்காமல் விரைப்பாக முன்னோக்கி வீசி மிக மிக வேகமாக நடக்கலாம் என்பதை அவர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்தார்கள்!

ஆனால் அதே சமயத்தில், உயர்குதிச் செருப்புக்கள் மாட்டிக் கொண்ட ஒருவருடைய உயரம் கவனிக்கப் படும் அளவிற்குக் கூட்டிக் காட்டப் படுவதையும், அவர்களுடைய நடையில் ஒரு சிறிது கம்பீரம் ஏறுவதையும், கழுத்தும் உடலும் நிமிர்ந்து இருப்பதையும், எல்லாவற்றையும் விட அவற்றின் கூர்மையாக உயர்ந்த குதி, "டக், டக், டக்"
என்று தளத்தில் அடித்துத் தெளிவாக ஒரு ஒலியை உண்டாக்கி, நடப்பவரை மற்றவர் கவனிக்க வைத்ததையும் பார்த்து அதனால் வியப்படைந்தார்கள்!

இந்த இரண்டு விதமான மாற்றங்களை ஒப்பிட்டு, முதலாவதில் ஆண்களுக்குச் சாதகமான பல முக்கியமான பயன்களும் இரண்டாவதில் பெண்களுக்குச் சாதகமான பல கவர்ச்சி அம்சங்களும் இருப்பதைக் கவனித்தார்கள்!

எனவே, "உயர்குதிக் காலணி" கள், பெண்களுடைய நடை வேகத்தை அடியோடு குலைக்கும் என்பதை மறைத்துக் கொண்டு, அவற்றால் இரண்டாவதாக ஏற்படும் கவர்ச்சி அம்சங்களை மிகவும் விளம்பரப் படுத்தியும் தாங்கள் அவற்றால் மிகவும் கவரப் படுவதாக ஒரு மாயை நடிப்பை வெளிப் படுத்தியும் பெண்களிடையே "உயர்குதிக் காலணி" களுக்கு ஒரு மிகைப்பட்ட கவர்ச்சியை ஏற்படுத்தினார்கள். பெண்களுக்கு அவற்றின் மீது மாளாத காதல் பிறந்தது!

அதனால், ஆண்கள் பெரிதும் விரும்பி எதிர்பார்த்த ஒரு சுயநலச் சதியும் நிறைவேறியது! அதாவது, பெண்கள் ஆண்களுடன் நடக்க நேரும் போது, அவர்களுக்கு ஈடாக வேகமாக நடக்க முடியவில்லை! தயங்கித் தயங்கி மெதுவாகவே நடக்க நேர்ந்தது! அத்துடன் மிக முக்கியமான ஒரு பக்க விளைவும் உண்டானது!
அதாவது, அவ்வாறு பெண்கள் ஆண்களுடன் நடக்கும் போது, அவர்களின் கவனம் முழுவதும் தங்கள் நடையழகு மற்றும் நிமிர்ந்து நடப்பதால் ஏற்பதும் கவர்ச்சி ஆகியவற்றின் மீதே இருந்தது!
அத்துடன், உண்மையில் அவ்வாறு அவர்கள் நடக்கும் போது, "இந்த "உயர்குதிக் காலணி" தடுக்கி விழவைத்து விடுமோ? இத்தனை பேரின் முன்னிலையில் மிகவும் அவமானமாகி விடுமோ?" என்று உள்ளூரக் கவலைப் படுவதற்கே நேரம் சரியாக இருந்தது! தம்மோது நடக்கும் ஆணைக் கவனிக்கவோ அவர்கள் பேசுவதைக் கேட்கவோ நேரம் இல்லாமல் ஆனது!!

ஆண்களும் அந்த "உயர்குதிக் காலணி வாத்து நடை" யை, "அன்ன நடை, மென்னடை, மயில் நடை, அழகு நடை, ஒசியும் நடை" என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி, உயர்குதிச் செருப்புக்களின் மீது பெண்களுக்குண்டான மோகத்தைக் குறையாமல் வைத்துக் கொண்டார்கள்! பெண்களுடன் நடக்கும் போது ஏதோ இவர்கள் தங்களுடைய "வேக
நடையை அவர்களுக்காகக் குறைத்துக் கொண்டு, அவர்களுடன் இணைந்து தாங்களும் மெதுவாக் நடப்பதைப் போல" ஒரு பாவனையை ஏற்படுத்தி வைத்துக் கொண்டார்கள்!

அம்மணியின் மென்பஞ்சுப் பாதங்களுக்கு அழகுச் செருப்பு மாட்டி விட்ட மாதிரியும் ஆயிற்று;அவளைப் பையப் பைய அன்ன நடை நடக்க வைத்த மாதிரியும் ஆயிற்று!
ஆண்களின் சத்தமில்லாத இமாலயச் சாதனை!

இந்த "உயர்குதிச் செருப்பு" அடைந்த மகத்தான புகழின் வீச்சு எதுவரை இருந்தது தெரியுமா?

சமீபத்தில் உக்ரேனின் தரைப் படை மற்றும் பிற படைகளின் அணிவகுப்புப் பயிற்சிகளின் போதும், பிற வரவேற்பு அணிவகுப்புக்களின் போதும் சீருடையுடம் "உயர்குதிக் காலணி" அணிந்து வரவேண்டியது கட்டாயமாக்கப் பட்டது.
கம்யூனிசச் சீனாவில் முப்படைகளிலும் பெண்கள் படிப்படியாக எல்லாம் பதவிகளுக்கும் தகுதி பெற்று அதிக அளவில் இடம் பிடித்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் தொகை சரிபாதிக்கும் அதிகமாக இருந்தது.பார்த்தார்கள் பழம்பெருச்சாளித் தலைவர்கள் இதை. உடனே ஒரு விதிமாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.

அதன்படி, பெண்கள், சீருடை அணிவகுப்புகளின் போது கட்டாயமாக உயர்குதிக் காலணிகளை மட்டுமே மாட்டிக் கொண்டு அணிவகுப்புக்களில் பங்கேற்க வேண்டும் என்று விதிமாற்றம் வந்தது!
பின்னர், பெண்களின் விருப்பமின்மையைக் கண்டு, ஏற்கெனவே ஆண்கள் குறைபாட்டால் கவலையில் இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் அந்த விதியைக் கொஞ்சம் தளர்த்தி வைத்தார்கள்!

இத்தோடு விட்டார்களா இந்த ஆங்கிலேய வைரஸ்கள்? ஆசிய ஆப்பிரிக்க தென்னமேரிக்க நாடுகளில் மக்கள் எல்லாரும் பிறவி இயல்பாகவே மிகவும் உறுதியான கால்கள் உடையவர்கள், சராசரி உயரத்தை விட அதிக உயரம் உடையவர்கள். அவர்களுடைய உணவுகளும் நீரும் பழக்க வழக்கங்களும் அப்படி அருமையான சக்தி தருபவை. அத்துடன் அவர்கள் அனைவரும் எப்போதும் எங்கு சென்றாலும் நடப்பதையே மிகவும் விரும்புபவர்கள்.

அவரகளுக்கு முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலியெல்லாம் முதுமை வரை வரவே வராதுஅவர்களுக்கும் இந்த ஆங்கிலேயர்கள், கவர்ச்சி விளம்பரங்களால், ஆசை காட்டி, இந்த "வாத்து நடைச் செருப்பு" ப் பழக்கத்தை, பெண்கள் மத்தியில் அமோகமாக நுழைத்து வியாபார வெற்றி அடைந்தார்கள். அங்கும் ஆண்கள் ஆங்கிலேயர் மாதியே பெண்களின் "வாத்து நடை" யைப் புகழ்ந்து தள்ளி உயர்குதிச் செருப்புக்களைக் கிட்டத் தட்டப் பெண்களுக்குக் கட்டாயமாக்கி வைத்தார்கள்!

********************************************************************************************
நீங்கள் இந்தக் கட்டுரையின் கருத்துக்களைப் பரிசோதிக்க விரும்புவீர்கள் என்பது தெரிகிறது!

அதற்காக, உயர்குதிச் செருப்பெல்லாம் மாட்டிக் கொள்ளாமலே இதைச் செய்து பார்க்கலாம்! குதிக்கால்களை உயர்த்துக் கொண்டு, விரல்களும் முன்பாதங்களும் தரையில் படச் சற்றுத் தூரத்திற்கு நடந்து பாருங்கள்.

நடை, அடியோடு மாறிவிட்டது இல்லையா? இப்படியே வேகமாக நடக்கப் பாருங்கள்; மாடிப் படியில் இயல்பாக ஏறிப் பாருங்கள்: கணுக்கால்களும் கெண்டைக்கால்களும் தொடைகளும் நரம்புப் பிடிப்பால் சுளுக்கிக் கொள்ளும்!
இது ஏன்? குதிகால்களை உயர்த்தி வைத்து நின்றாலே, உங்களுடைய உடல் மிகவும் நிமிர்த்தப்பட்டுப் பின்னோக்கித் தள்ளப் படும். பாதங்களுக்கு இடையில் நடுவில் விழ வேண்டிய "உடலின் புவி ஈர்ப்பு மையம்" குதிகால்களுக்கு நடுவில் இருக்குமாறு நகர்த்தப் படும், அதை ஈடுசெய்ய, முதுகுத் தசைகள், தசைநார்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் உடலை முன்னோக்கி இழுப்பதற்காக எப்போதும் விரைப்பாகவே இருக்கும். நிற்கும் போதே இப்படி இருக்க, நடக்கும் போது எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்!

இப்படி ஒரு துண்டு மரக்கட்டையைக் குதிகாலில் மாட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தீர்களால்,சர்வ நிச்சயமாக, நாற்பத்தைந்து வயதிற்குள், உங்களுக்கு, முழங்கால் மூட்டு வலியும், கால் குத்தல் குடைச்சலும், முதுகு வலியும், இடுப்பு வலியும் தொடைவலியும் உண்டாகியே தீரும்! அப்போதுதான் உங்களுக்கு மருத்துவர்கள்,
"நீங்கள் இனிமேல் உயர்குதிச் செருப்புகளை மாட்டிக் கொள்ள வேண்டாம்; அவைதான் உங்கள் முதுகு, கால், இடுப்பு வலிகளுக்கு மூல காரணம்" என்றும், சொல்லிச் சந்தடி சாக்கில் "ஒரு வர்மா ஆர்த்தோ செப்பல்ஸ்" எனப்படும் "அக்யூ ப்ரெஷர் பாயிண்ட் செப்பல்ஸ்" ஐ வாங்கி மாட்டிக் கொள்ளச் சொல்வார்!
போதாக் குறைக்கு, இருக்கும் வலிகளைக் குறைக்க என்று, "ஐனாக் ஃபிஃப்டி" மாதிரி ஸ்டீராய்டு மாத்திரைகளையும் மார்ஃபினாய்டு மருந்துகளையும் அந்த க்ரீம், இந்தக் க்ரீம் எல்லாம் எழுதித் தருவார்! அவற்றைத் தவறாமல் வாங்கிக் கொண்டு வேளை தவராமல் விழுங்கி வைப்பீர்கள்!

உங்கள் பங்கிற்கு நீங்களும் முட்டிக்குளங்கரை எண்ணெய், கருங்குரங்கு வாதத் தைலம், தெலுங்குபாளையும் முட்டிவலித் தைலம், ஜோதிரார்ஜுன சர்வ வாத லேகியம், மசக்கவுண்டப் பாளையம் தொட்டி எண்ணெய், அனுப்பர்பாளையம் அக்யூ பஞ்ச்ச்சர் வைத்தியம் எல்லாவற்றையும் சகட்டு மேனிக்குக் கலந்து கட்டி அடிப்பீர்கள்! சாப்பாட்டிலும் முடக்கற்றான் சட்டினி, முடக்கற்றான் தைலம், முடக்கற்றான் சூப், வாத நாராயணம் இலைப் பொரியல், வாதமடக்கி விதைப் பற்று என்று எதையும் ஒரு கை
பார்ப்பீர்கள்!

""உயர்குதிக் காலணிகள்" மாட்டிக் கொண்ட ஒருவருடைய உயரம் கவனிக்கப் படும் அளவிற்குக் கூட்டிக் காட்டப் படுவதையும், அவர்களுடைய நடையில் ஒரு சிறிது கம்பீரம் ஏறுவதையும், உடல் நிமிர்ந்து இருப்பதையும், எல்லாவற்றையும் விட அவற்றின் கூர்மையாக உயர்ந்த குதி, "டக், டக், டக்" என்று தளத்தில் அடித்துத் தெளிவாக
ஒரு ஒலியை உண்டாக்கி, நடப்பவரை மற்றவர் கவனிக்க வைத்ததையும்" பார்த்து அதனால் வியப்படைந்து, "உயர்குதிக் காலணிகள்" மீது ஒரு காதல் மோகத்தில் வீழ்ந்த பெண்கள், அத்தகைய "உயர்வுகளைத் தரும்" அந்தக் காலணிகளை ஏன் ஆண்கள் மாட்டிக் கொள்ளவில்லை என்பதை நினைக்கவே இல்லை, இன்று வரை!

அத்துடன், குதிகால்களை உயர்த்தி வைத்துப் பெண்களை மட்டம் தட்டி வைத்திருக்கும் ஆண்களின் உள்நோக்கத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை!

**********************************************************************************************************
நான் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு வராமல் நீதான் காத்தருள வேண்டும் ராமச்சந்திரா!
அப்படி வந்தாலும் நீயும் என் பக்கத்தில் இருந்து சீதாப் ப்ராட்டிக்கு நீ ஏன் "குதியுயர் காலணி" வாங்கித் தரவில்லை என்பதை எடுத்துச் சொல்வாயாக ராமச் சந்திரப் பிரபோ!!
**********************************************************************************************************

- - - - - - - - "சித்திரைச் சந்திரன்"
செல்வப் ப்ரியா-சந்திர மௌலீஸ்வரன் மகி

எழுதியவர் : செல்வப் ப்ரியா-சந்திர மௌல (4-Nov-21, 5:28 pm)
பார்வை : 30

மேலே