வேளாண் குடிக்கு அழகென்ப மூன்று – திரிகடுகம் 42

நேரிசை வெண்பா

கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு 42

- திரிகடுகம்

பொருளுரை:

சூதாட்டத்தினால் கிடைத்த பொருளை விரும்பாமையும்,

பலநாள் பழகினாலும் பிராமணரை தீக்கு அஞ்சி நடப்பதுபோல் அஞ்சி நடத்தலும்,

பயிர் செய்தலில் விருப்பம் செலுத்தி வாழுதலும் ஆகிய இம்மூன்றும் வேளாண்மையுடைய குலத்துக்கு அழகென்று பெரியோர் சொல்வர்.

கருத்துரை:

சூதாடிப் பொருள் சம்பாதியாதிருத்தலும், பிராமணரை நெருப்புக்கு ஒப்பாக நினைந்து நடத்தலும், உழுது பயிர் செய்து வாழ்தலும் வேளாளர்க்குச் சிறந்த அறம் ஆகும்.

கழகம் - சூதாடுமிடம்,

தீப்போல் ஒழுகலாவது - குளிர்காய்வார் நெருப்பை மிகநெருங்காமலும் நீங்காமலும் ஒத்த இடத்து இருப்பதுபோல் பார்ப்பார் இடத்தும் நின்று நடத்தல்;

பார்ப்பார் – மறைநூல் கற்றோர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-21, 8:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே