23ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 23
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்


உலகில் அழியாத பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நமக்கு உலகில் அழியாத பொருட்கள் இருப்பது பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. நமக்கு அழியாத பொருட்கள் பற்றி தெரியாத காரணத்தால்தான் நாம் அழியாத பொருட்களின் மீது ஆசையோ விருப்பமோ கொள்வதில்லை. அழியாத பொருள் ஒன்று இருப்பதாகத் தெரிந்தால் அதன் மீது நாம் அளவு கடந்த ஆசை வைத்து அதனை அடைவதற்கு அல்லும்பகலும் முயற்சி செய்து கொண்டிருப்போம்.
உலகில் அழியக்கூடிய பொருட்கள் அனைத்தும் அநித்தியம். ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்த்தால் அநித்தியம் என்பது காரியம், நித்தியம் என்பது காரணம் ஆகும். காரணம் என்பது நித்தியம் என்றும் காரியம் என்பது அநித்தியம் ஆகும். காரணம் என்றால் எந்தப்பொருள் எப்படி எந்தத் தன்மையில் இருக்குமோ அது மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கும். காரியம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது காரணம் அப்படியே இருக்கும். காரியம் என்றால் உலகில் காணும் அநித்தியப்பொருட்கள் அவ்வப்போது மாறும், இல்லையெனில் சிறிது காலத்தில் அவை அழிந்து விடும். உலகில் காணும் பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக இருப்பதில்லை. இதனையெல்லாம் அனுபவத்தில் நாம் இவ்வுலகில் கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். களிமண் காரணம் என்றால், களிமண்ணால் செய்யப்பட்ட மண்பானைகள் காரியம் ஆகும். காரியம் என்று கருதப்படும் மண்பானைகள் சுலபமாக அழிந்து விடும். ஆனால் அந்த பானைகள் உருவாவதற்கு காரணம் என்று கருதப்படும் களிமண் அதே தன்மையில்தான் மாறாமல் இருக்கும் அது அழிவதில்லை. இந்த உலகத்தில் உள்ள எந்தப் பொருட்களும் நித்தியமாக இருப்பதில்லை.

உலகில் அழியக்கூடிய பொருட்கள் அனைத்தும், அதனால் வரக்கூடிய இன்பங்கள் அனைத்தும் அநித்தியமானவை என்று உபநிஷத்தில் கூறப்படுகிறது. உலகில் அழியாமல் இருக்கும் பொருள் அந்தப்பொருளினால் வரக்கூடிய ஆனந்தம் நித்தியம் ஆகும். நித்தியமாக இருப்பது நம் கண்ணுக்குத் தெரியாததும் ஞானத்தினால் உணரக்கூடிய பரம்பொருள் ஒன்றாகும். இதனை ஒவ்வொருவரும் ஆன்மீக வழியில் நின்று ஞானத்தின் மூலம் பரம்பொருளை அறிந்து கொள்ள முடியும். ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்த்தால் சுருக்கமாகக் கூறினால் காரணம் என்பது நித்தியம், காரியம் என்பது அநித்தியம் ஆகும்.

உலகில் எந்தப்பொருள் காரணமோ அந்தப்பொருள் அழியாமல் அப்படியே இருக்கும். எடுத்துக்காட்டாக தங்கம் என்ற உலோகப்பொருள் காரணம் அதாவது நித்தியம் ஆகும். ஆனால் அதில் செய்யகூடிய காசுமாலை, நெக்லஸ் வளையல் போன்றவை காரியம் ஆகும். அதாவது அவை அநித்தியமானவை. பொன்நகைகள் உருத்தெரியாமல் சேதமடைந்து விட்டால் அதனை காசுமாலை நெக்லஸ் வளையல் என்று அழைப்பதில்லை. அதனை தங்கம் என்றுதான் அழைப்போம். ஆனால் மூலப்பொருள் தங்கம் என்ற உலோகத்தன்மை எப்போதும் மாறுவதில்லை அழிவதில்லை. இதைபோல்தான் உலகில் உள்ள அநித்திய பொருட்கள் அனைத்தும் காரியம் என்றும், நித்தியப்பொருட்கள் அனைத்தும் காரணம் என்றும் ஆன்மிகம் கூறுகிறது. எது காரணமாக இருக்கிறதோ அது அப்படியே இருக்கும். அதாவது தங்கம் என்ற உலோகப்பொருள் மாறாதது போன்று. ஆன்மீகத்தில் காரியம் அநித்தியம். காரியம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது காரணம் அப்படியே நித்யமாக இருக்கும்.

காரியம் என்பது அநித்தியப்பொருட்கள் சிறிது காலத்தில் அழிந்து விடும். அதாவது தங்க நகைகள் போன்று அநித்தியப்பொருட்கள் உருத்தெரியாமல் அழிவதைப்போல். ஆன்மீகத்தில் காரணம் என்பது அழியாத நித்தியப் பொருட்கள். உலகில் காணப்படும் அழியும் பொருட்கள் அனைத்தும் காரியம். அதில் உள்ள காரணம் என்ற பொருள் கண்ணுக்குத்தெரியாத ஞானத்தினால் உணரக்கூடிய பரம்பொருள். எடுத்துக்காட்டாக மரம் என்பது காரணம் என்னும் நித்யப்பொருள். அதில் செய்யப்படும் மரமேஜை, மரநாற்காலி, மரப்பொம்மைகள் காரியம் என்னும் அழியக்கூடிய அநித்தியப் பொருள்கள் ஆகும். மேஜை, நாற்காலி, பொம்மைகள் போன்ற மரச்சாமான்கள் காரியம் என்பதால் அவை நாளடைவில் அழிந்து விடும். ஆனால் மேஜை, நாற்காலி, பொம்மைகள் போன்றவைகள் உருவாகக் காரணப்பொருளாக இருக்கும் மரத்தின் தன்மைகள் மாறுவதில்லை, எப்போதும் அழிவதில்லை. அணுவைப்போல் சிதைத்தாலும் மரத்தின் தன்மை மாறுவதில்லை. உலகத்தில் அழியக்கூடிய பொருட்களுக்கு அனைத்தும் அநித்தியம் அதில் நம் கண்ணுக்குத் தெரியாததும் ஆன்மீக வழியில் நின்று ஞானத்தினால் உணரக்கூடியதுமான காரண காரியத்தை கடந்து இருப்பது பரம்பொருள் மட்டும் நித்தியமாகும்.

நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகத்தில் காணப்படும் பொருட்கள் அந்தப் பொருட்களினால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி என்பது நிரந்தரமாக இருப்பதில்லை. அவைகள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும் அல்லது அழிந்து கொண்டே இருக்கும். நம்முடைய கண்கள் நிலையான பொருள்களை இதுவரை உலகத்தில் பார்த்ததில்லை, அதாவது அப்பொருள்கள் மூலம் வரக்கூடிய இன்பமும் நிலையாக இருந்ததில்லை. நமது விவேக அறிவு கொண்டு அனுபவத்தின் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். உலகில் காணப்படும் பொருட்கள் அநித்தியம் என்று நமது மனம் பக்குவநிலைக்கு வரும்போது, ஆசை போன்ற எண்ணங்கள் ஒருபோதும் வருவதில்லை. ஆசை போன்ற எண்ணங்கள் நமது உள்ளத்தில் இல்லாதபோது நாம் தேடும் விரும்பும் மன அமைதி தானாகவே வந்தடையும்.

உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் எதனையும் ஓரளவுக்கு பிரித்து அறியும் அறிவு இருக்கிறது. இதனை அனுபவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். நமது அனுபவத்தின் மூலம்தான் இந்த அறிவு வரவேண்டும் என்பதில்லை. சிந்தித்துப் பார்த்தால் சிலருக்கு உண்மையான விவேக அறிவு தோன்றுவதில்லை. அதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் மற்றவர்கள் மீது உள்ள விருப்பு வெறுப்புகளை மனதிலிருந்து நீக்காமல் மனதிற்குள் பதிந்து வைத்துக்கொண்டு இருப்பதால்தான், நமக்கு விவேக அறிவு வெளிப்படாமல் இருக்கிறது.

நமது மனதில் நம்மை அறியாமல் பதிந்து உள்ள விருப்பு வெறுப்புகளை நீக்கினால் விவேக சக்தி தோன்றும். நமது மனதில் அறிந்தும் அறியாமல் பதிந்து உள்ள விருப்பு வெறுப்புகளை அகற்றுவதற்கு வேண்டுமென்றால் சாஸ்திரங்களில் இதிகாசங்களில் வேதங்களில் கூறியுள்ளபடி வாழ்வதற்கு வேண்டும். தர்மத்தின்படி எல்லா உயிர்களும் தம்முயிர்போல் நினைத்து, ‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்ற மனநிலையில் உலகில் அன்புடன் வாழ வேண்டும். அவ்வாறு கடைப்பிடித்து வாழும்போது விவேக சக்தி தோன்றும்.

உலகில் தர்மத்தின்படி வாழ்ந்து அதன்படி செயல்பட்டால்தான், நம்மிடம் இருக்கும் பாவத்தின் பலன்களை முற்றிலும் நீக்குவதற்கு முடியும். இதற்கு சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி மனம், வாக்கு, காயம் மூன்றிலும் தர்ம சிந்தனையுடன் செயல்படுவதுதான் மனிதனுக்கு ஒரே வழி இந்த ஆன்மீக வழியாகும். மனிதர்கள் தர்மசிந்தனைகள் தர்ம செயல்பாடுகளுடன் வாழவேண்டுமானால் ஆன்மீக வழியில் சிந்தித்து அதன்படி செயல்புரிய வேண்டும்.

மனிதனுடைய பாவம் என்பது மங்கிய புத்தி, அறிவற்ற நிலை ஆகும். இந்த நிலை மனிதனுக்கு வருவதற்கு காரணம் தர்ம சாஸ்திரங்களில் கூறியவற்றைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக மனம்போனபடி பாவச்செயல்களை செய்வது ஆகும். அவ்வாறு மனம் போனபடி வாழ்வது பாவத்தின் மூலம் வரும் துன்பங்களை துயரங்களை அவன் அறிந்தும் அறியாமல் அனுபவிக்கிறான். தர்ம சாஸ்திரங்களில் இதிகாசங்களில் வேதங்களில் கூறியுள்ளபடி மனிதன் வாழ வேண்டும்.

அவ்வாறு வாழ்ந்து செயலில் ஈடுபட்டால் விவேக அறிவினால் அவன் தன் பாவங்களை நீக்குவதோடு, மனிதன் உன்னத நிலையையும் அடையலாம். விவேக அறிவு பெறுவதற்கு ஆன்மிகம் மனிதர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது. எனவே மனிதர்கள் விவேக அறிவினை ஆன்மீக பயிற்சியின் மூலம் பெற வேண்டும். இந்த உலகில் நிலையற்றது, நிலையானது என்பதை பற்றி அறிந்து கர்மயோகத்தின்படி வாழ்ந்து உன்னதநிலைக்கு வருவதற்கு நாம் விவேக அறிவினை பயன்படுத்த வேண்டும்.

நாம் வாழும் இந்த உலகம் சத்தியம் அல்ல. பரம்பொருள் ஒன்றே சத்தியம் இந்த அறிவு மட்டும் ஒரு மனிதனுக்கு ஆரம்பத்தில் மனதில் நன்கு பதிந்து இருந்தால் மட்டும் போதுமானது. மற்றபடி நாம் பக்தி, பரம்பொருள் பற்றியெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டாம். வைராக்கியத்திற்கு மூல காரணம் விவேக அறிவு ஆகும். விவேகம் என்பது வைராக்கியத்திற்கு விதை என்று கூறலாம். விவேகம் இருந்து வைராக்கியம் இல்லாமல் இருக்கலாம். விவேகத்தின் மூலம் வரக்கூடிய வைராக்கியம்தான் மனிதனின் மனதில் நிலைத்து நிற்கும். வேறு ஒரு காரணத்தினால் வரக்கூடிய வைராக்கியம் மனதில் நிலைக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதை அறிவதற்கு நமக்கு விவேக அறிவு என்பது தேவைப்படுகிறது. விவேகத்தின் பலன் அல்லது நன்மை என்ன என்று சிந்தித்துப் பார்த்தால் வைராக்கியத்திற்கு அது மூலகாரணமாக இருப்பது விவேக அறிவுதான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

உலகில் உள்ள நல்ல பொருட்களை, நல்ல செயல்பாடுகளை நமது மனம் நாடவில்லை என்றால், நல்ல பொருட்கள், நல்ல செயல்பாடுகள் எவை என்று நமக்கு தெரியாத காரணத்தினால்தான் அல்லது நமது அறிவுக்கு எட்டாததுதான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் அழியாத பொருட்கள் இருக்கிறது. அதாவது அழியாத பொருட்களால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சி ஆனந்தம் அழியாது நம்மிடம் இருக்கும் என்று தெரிந்தால் அந்தப் பொருள்களை அடைவதற்கு நமக்கு ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட அழிவில்லாத பொருள்கள் மீது அளவுகடந்த ஆசை கொள்வோம். உலகில் உள்ள பொருட்களால் வரக்கூடிய இன்பம் மகிழ்ச்சியில் விருப்பமில்லாமல் இருப்பது வைராக்கியம் என்பது ஆகும். சிலர் வைராக்கியம் என்றால் வெறுப்பு என்றும், சிலபேர் வைராக்கியம் என்றால் பிடிவாதம் என்றும் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் அதாவது ஆன்மீக வழியில் வைராக்கியம் என்றால் விருப்பமின்மை என்று பொருள் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவர் முன்பாக தட்டில் பலவகையான இனிப்பு பலகாரங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் அவர் நெய் கலந்த இனிப்பு பலகாரத்தினை மட்டும் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். மற்ற இனிப்பு வகை பலகாரங்களை அவர் சாப்பிடவில்லை என்றால், அதன் மீது அவருக்கு வெறுப்பு என்று அர்த்தம் என்று புரிந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு நினைக்கவும் கூடாது. விருப்பமில்லை என்றால் அப்போது அவருக்கு மற்ற இனிப்புவகையில் விருப்பமில்லை என்றுதான் அர்த்தம். சிலபேர் அதனை வெறுப்பு என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விருப்பமின்மை என்றால் விருப்பமில்லை என்றுதான் அர்த்தம். அந்த நேரத்தில் அந்த இனிப்பு அவருக்கு சாப்பிட விருப்பமில்லை. வேறொரு சமயத்தில் மற்ற இனிப்புவகையின் மீது அவருக்கு விருப்பம் இருக்கலாம் என்று கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த பிரபஞ்சமானது விதவிதமான பொருள்களின் மூலம் இன்பங்களை ஆனந்தத்தை மனிதர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த இன்பத்தில் மனிதர்கள் அழுந்தி மூழ்கி விடமால் இருக்க வேண்டும். அதேபோல் உலகில் உள்ள பொருள்களினால் வரும் இன்பங்களில் மகிழ்ச்சியில் மீதும் அடிமைப்பட்டு அந்தப் பொருட்களை அடைவதற்கு மனதில் எண்ணி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. அவற்றின் மீது ஆசை வைத்து நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சியை மேற்கொண்டு வழிமுறைகளை ஆராய்ந்து அதன்படி செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படுவதற்கு ஆன்மீக வழியில் இதிகாசங்கள் வேதங்கள் உபநிடதங்கள் போன்றவை நமக்கு வழி காட்டுகிறது. ஒரு பொருள் மீது அளவுகடந்து ஆசை வைத்து அதன் மூலம் வரக்கூடிய இன்பத்தில் மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் பற்று வைக்காமல் தாமரையிலைத் தண்ணீர்போல் பொருட்களின் மீது பற்று இருப்பதுதான் வைராக்கியம் ஆகும்.

நாம் எவ்வளவுதான் என்னதான் முயற்சி செய்தாலும் இந்த வைராக்கியம் மட்டும் வரமாட்டேன் என்கிறது என்று சிலபேர் நினைப்பார்கள். பொதுவாக ஒரு பொருள் மீது அளவுகடந்து ஆசை வைத்து அதன் மூலம் வரக்கூடிய இன்பத்தில் மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் பற்று வைக்காமல் இருக்கக்கூடிய வைராக்கியம் அனைவரிடமும் அவ்வளவு சுலபமாக வருவதில்லை. நமக்கு அத்தகையதொரு வைராக்கியம் படிப்படியாகத்தான் வரும். அதுவரையில் நாம் பொறுமையுடன் ஆன்மீக வழியில் முயற்சியினை விடாமல் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். நமது மனதில் வைராக்கியம் வருவதற்கு மனம் ஒரு பக்குவநிலைக்கு வர வேண்டும்.

நமது மனம் பக்குவநிலை வருவதற்கு பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, மன்னிக்கும் தன்மை போன்ற குணங்கள் இருக்க வேண்டும். உடனே அனைவருக்கும் இத்தகைய வைராக்கியம் வந்து விடுவதில்லை. உலகில் போகம் தரக்கூடிய பொருட்களினால் வரும் இன்பங்களில் பற்றில்லாமல் இருப்பது, அது உணவாக இருக்கலாம். பொன்பொருளாக காட்சிப்பொருட்களாக அல்லது வேறு எந்தவகைப் பொருட்களாகக்கூட இருக்கலாம். அவற்றின்மீது ஆழ்ந்த பற்றில்லாமல் இருப்பதுதான் பூரண வைராக்கியம் ஆகும். இத்தகைய வைராக்கியம் நமக்கு வந்துவிட்டால் நாம் தேடும் விரும்பும் மன அமைதி தானாக வந்தடையும்.

உலகில் இருக்கும் எந்தப் பொருளின்மீதும் மனம் ஆசை கொள்ளக்கூடாது. ஆசையை விட்டொழிக்க வேண்டும். நமது எண்ணத்தில் நம்மை அறியாமல் உருவாகும் சில ஆசைகள் பூர்த்தியாகாமல் இருந்தால் நம்மை எந்தவிதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர வேண்டும். அந்த ஆசைகள் நிறைவேற வேண்டும் பூர்த்தியாக வேண்டும் என்று விடாப்பிடியாக அந்தப் பொருளின்மீது மிகுந்த பற்று வைத்திருப்போம். அப்படிப்பட்ட ஆசைகள் மனதில் இருக்கலாம் மனதில்கூட தோன்றலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அந்த ஆசையானது நிறைவேற வேண்டும் என்று பிடிவாதமில்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு ஆன்மீக வழியில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உலகில் காணப்படும் எத்தகைய ஆசையும் நம் மனதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யும்படி விட்டுவிடக்கூடாது. அந்த ஆசைக்கு நாம் ஒருபோதும் அடிமையாகவும் கூடாது.

எடுத்துக்காட்டாக ஒருவர் விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது அவர் தகுதிக்கு மீறிய ஆசை என்று தெரிந்திருந்தும் அதில் விடாப்பிடியாக அதன்மீது ஆசை வைக்கக்கூடாது. அந்தக் கார் வாங்காமல் இருந்தால் அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் அவர் வாழ்வில் குடும்பத்தில் ஏற்படப்போவதில்லை. அவர் கார் வாங்க வேண்டும் என்று அவர் ஆசைப்படலாம். அந்த எண்ணம்கூட அவர் உள்ளத்தில் தோன்றலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அந்த எண்ணம் பூர்த்தியாக வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கக்கூடாது. ஆன்மீக வழியில் முன்னேற்றம் காண நினைப்பவருக்கு அவர் மன அமைதிக்கும் அந்த விடாப்படியான ஆசை ஒரு தடைக்கல்லாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். இத்தகைய விடாப்பிடியான ஆசை மனதை தவறான வழிக்கு அழைத்துச் சென்று விடும்.

வைராக்கியம் அடைய வழிமுறைகள் என்ன என்பது பற்றி ஆராய்ந்து சிந்தித்து முயற்சிகள் மேற்கொள்ளும்போது, வைராக்கியம் என்பது நமது மனதில் உறுதியாக ஏற்படும். வைராக்கியம் ஏற்படுவதற்கு பல வழிகள் உள்ளன. பொதுவாக நமது மனதில் ஒரு பொருளின்மீது அவ்வப்போது தோன்றும் தேவையற்ற ஆசைகளை வளர விடமால் பொறுமையாக முளையிலே கிள்ளி எறிந்துவிட வேண்டும். மனிதன் மானம் காக்க ஆடைகள் அணிவதற்கு ஆசைப்படலாம். அப்படி அணியும் ஆடைகள் விதவிதமான ஆடம்பரமான ஆடைகளாக அணிய ஆசைப்பட்டால் அது பேராசை ஆகும். உடனே நமக்கு தாகத்திற்குத் தண்ணீர் அருந்த ஆசை. மூச்சு விட வேண்டும் என்ற ஆசை. உலகில் நலமுடன் வாழ வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கலாமா என்று கேட்கத் தோன்றும்.

உலகில் உள்ள பொருட்களின்மீது அந்தப் பொருட்களினால் வரக்கூடிய மகிழ்ச்சியில் ஆசை இருக்கலாம். அது பேராசையாக மட்டும் இருக்கக்கூடாது. சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தர்ம நியாயப்படி ஆசைகள் இருக்க வேண்டும். நாம் உணவின் மீது ஆசை வைக்கலாம். நாள்தோறும் அறுசுவையோடு உணவு உண்ண வேண்டும் என்று நம் மனதில் எண்ணக்கூடாது. அது பேராசை என்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். இதுபோன்று உலகில் காணும் பொருட்களின்மீது அளவோடு மனதில் ஆசைகளை வைத்துக் கொள்வது ஒன்றும் தவறில்லை என்று ஆன்மிகம் கூறுகிறது.

ஒரு பொருளின்மீது ஆசைபடும்போது தர்மநியதிக்குட்பட்ட ஆசையாக இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். மனதில் பேராசை என்பது கூடாது ஒரு மாணவன் எழுதுவதற்கு ஒரு பேனா வைத்துக் கொள்ளலாம். அவன் விதவிதமான பேனாக்கள் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுவது பேராசை ஆகும். அதற்கு ஆன்மீகவழியில் பேராசைக் கொள்ளக்கூடாது என்ற சிந்தனை தோன்றி, மனஉறுதிப்பாடு உதவி செய்கிறது. ஒரு பொருளின்மீது அளவுக்கு மீறி ஆசை கொள்ளக்கூடாது. ஒரு பொருளை அடைவதற்கு விரும்புவதும் அப்பொருளினால் இன்பம் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று விடாப்பிடியாக ஆசையில் பிடிவாதம் கூடாது. அப்படிப்பட்ட ஆசையை விடுவதற்கு வைராக்கியம் உதவி செய்கிறது. அவ்வாறு மனதில் வைராக்கியம் வரும்போது நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கிறது.

ஒருவருக்கு தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் பதிந்து நாள்தோறும் செய்தித்தாள் படித்து வருகிறார். ஒருநாள் எதிர்பாராதவிதமாக செய்தித்தாள் வரவில்லையானால் அவர் அன்று முழுவதும் தன்னோட வாழ்வில் எதையோ இழந்து விட்டதுபோல் உணர்வார். அவருக்கு செய்தித்தாள் படிப்பத்தில் அவருக்கு ஆசை விருப்பம் மட்டும் இல்லாமல், அந்த செய்தித்தாள் படிப்பதில் அவரையும் அறியாமல் அதற்கு அடிமையாகி விட்டார் என்றுதான் கூற வேண்டும். அன்று செய்தித்தாள் படிக்காமல் இருந்ததால் அவர் வாழ்வில் எதனை இழந்து விட்டார். அவர் ஒன்றுமே இழக்கவில்லை. இதேபோன்றுதான் உலகில் உள்ள பொருட்களின்மீது ஆசை கொள்வது. இப்படிப்பட்ட ஆசையைத்தான் விடவேண்டும். பிடிவாதம் என்பது ஒருவகையான பேராசை என்பதை உணர வேண்டும். உணர்ந்து அத்தகைய பிடிவாதத்தினை நம் மனதிலிருந்து அகற்றுவதற்கு ஆன்மீக வழியில் மனதில் வைராக்கியம் கொள்ள வேண்டும்.

நாம் நமது மனதில் நம்மையும் அறியாமல் வரக்கூடிய ஆசையை பேராசையை எப்படி விட முடியும் என்று சிலருக்கு கேட்கத் தோன்றும். ஒவ்வொரு ஆசையும் சங்கல்பத்திலிருந்து தோன்றியுள்ளது. எனவே ஆசையை விடவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி சங்கல்பத்தை விட வேண்டும். பெரும்பாலும் ஒருவருக்கு ஒரு பொருளைப் பார்த்தவுடன் ஆசை அதன் மீது வருவதில்லை. அப்பொருளைப்பற்றி பார்த்து நினைவில் வைத்துக்கொண்டு அதனால் வரக்கூடிய இன்பத்தை மனதில் இடைவிடாது சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு சிந்தித்துக்கொண்டே இருக்கும்போது அதன்மீது ஆசை என்ற எண்ணம் மனதில் பேராசையாக உருவாகி விடுகிறது என்பதை உணரவேண்டும். சங்கல்பத்தை விடவேண்டும் என்றால் அந்தப்பொருளின் மீது உள்ள ஆசையை முதலில் விடுதல் வேண்டும்.

அதாவது அப்பொருளினால் வரும் இன்பத்தை பற்றி மீண்டும் மீண்டும் மனதில் நினைக்கக்கூடாது. அதற்கு வைராக்கியம் துணை புரிகிறது. உலகில் அழகான பொருளைப் பார்த்தவுடன் அப்பொருளானது நம் கண் முன்பாக இல்லை என்றாலும் அப்பொருள் நம் மனதில் இருந்துகொண்டு நம் மனதை விட்டு அகலாமல் ஆக்கிரமத்துக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு இருப்பதால்தான் அப்பொருளின் மீது பேராசை வருகிறது. இதிலிருந்து ஒரு பொருளை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டே இருப்பதால்தான் அதன் மீது பேராசை வருகிறது. அதன்மூலம் நாம் நம்மையறியாமல் பல தவறுகள் செய்யத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது என்பதை மனம் உணர வேண்டும். அதனை மனம் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் என்பதை பார்க்கலாம். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (15-Nov-21, 12:32 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 53

மேலே