வஞ்சத்திற் றீர்ந்த பொருள் மூன்று – திரிகடுகம் 43
நேரிசை வெண்பா
வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள் 43
- திரிகடுகம்
பொருளுரை:
தீவழிச் செல்லாமல் காக்குதலால் இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்;
உடலின் செய்கை அடங்குதலால் குற்றமற்ற மறுமையில் தெய்வப் பிறப்பு உளதாகும்;
உண்மையாக மனம் அடங்குதலால் முத்தி உள்ளதாகும், இம்மூன்று அடக்கமும் தீமையினின்றும் நீங்கிய பொருள்களாகும்.
கருத்துரை:
உளம், உரை, செயல் ஆகிய மூன்றும் அடக்கமாயிருப்பவர் முத்தி யடைவர்.
துப்புரவு - உறுதியான அனுபவம்; இங்குச் செல்வம்,
திப்பியம்: திவ்வியம் என்ற வட சொற்றிரிபு: சொர்க்கத்தில் பிறப்பது என்பது பொருள்.
வீடு - அவா முதலியவற்றை விடுதலால் உளதாகும் முத்தி: