விருந்தின்றி யுண்ட பகல் - திரிகடுகம் 44

இன்னிசை வெண்பா

விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு. - திரிகடுகம் 44.

பொருளுரை:

விருந்தினரோடு இல்லாமல் தனித்திருந்து உணவு உட்கொண்ட பகல்பொழுதும்,

அழகிய அணிகலன்கள் அணிந்த பொருத்தமான மனைவியருடன் பொருந்தாது கழித்த இரவும்,

வறியவர்க்கு அவர்தம் நிலையறிந்து உதவி செய்யாத நாட்பொழுதும்

அறிவுடையார்க்கு, நல்ல உடல் திடகாத்திரமானவர்களுக்கு நோயுற்ற நாட்களேயாகும்.

கருத்துரை:

விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க்கு ஈயாக் காலை வேளையும் அறிவுடையோர்க்கு நோய் செய்வன.

நோயைத் தருபவற்றை நோய் என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் உபசார வழக்கு.

திருந்திழையார் என்பதற்கு மேற்பொருளின்றி, திருந்து என்பதை இழைக்கு அடையாகக் கொள்ளாது பொருள் சிறப்புக்கருதி இழையார் என்பதற்கு அடையாகக் கொள்வதும் ஆம்.

இப்பதிவிற்குக் கருத்தாக:

நேரிசை வெண்பா

விருந்தோம்பல் ஈதல் விரும்பினார் தோளோ(டு)
இருந்தோம்பி வாழும்,இல் வாழ்க்கை - மருந்தாகும்
என்றே உரைக்கின்ற இன்கவிதை பார்த்தேன்! நீர்
நன்றேசெய் தீர்!இந்த நாள்! – எசேக்கியல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-21, 7:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே