பொல்லாப் புலைநிலையில் போகாமல் திருவருளை எய்தி யுயர்க இனிது - பிறப்பு, தருமதீபிகை 910

நேரிசை வெண்பா

புல்லிய பொல்லாப் புலைநிலையில் போகாமல்
நல்ல பிறவியை நண்ணியுள்ளாய் - ஒல்லையில்
செய்ய வுரியதைச் செய்து திருவருளை
எய்தி யுயர்க இனிது. 910

- பிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புலையான இழிந்த பிறவிகளில் தொலைந்து போகாமல் உயர்வான நல்ல மனிதனாய்ப் பிறவியை அடைந்துள்ளாய்; விரைந்து செய்யவுரிய நலங்களைச் செய்து தெய்வ அருளை எய்தி உயர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு நலம் நன்கு அமைந்ததாதலால் மனிதப் பிறவி உயர்ந்தது எனப் புகழ்ந்து போற்ற வந்தது. மாடு, ஆடு முதலிய இழிபிறவிகளில் இழிந்து போகாமல் உயர்ந்த பிறப்பை அடைந்து வந்துள்ளமையால் சீவ கோடிகளுள் மனிதன் அதிசயமான மகிமையுடையவனாய் எவ்வழியும் மாண்பு மிகப் பெற்றான்.

அரிய இந்தப் பிறவியைப் பெற்றவன் இதற்குரிய பயனை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும். பிறவியின் பயனை மறவியால் இழந்து விடலாகாது. அந்தப் பயன் என்ன? உயிர் துயர் நீங்கி உய்தி பெறுவதே; யாதொரு துன்பமுமின்றி என்றும் இன்ப மூர்த்தியாயுள்ளவன் இறைவன் ஒருவனே; உயிர்க்குயிரான அப்பரமனைக் கருதி உள்ளம் உருகிவரின் பிறவி தீர்ந்து பேரின்ப வெள்ளம் பெருகிவரும். அந்த அதிசய ஆனந்தத்தை இழந்து விடின் அவலத் துயர்கள் தொடர்ந்து கொள்ளும். காலம் இசைந்த போதே கதிநலம் காணுக.

எய்தற்(கு) அரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்(கு) அரிய செயல். 489 காலம் அறிதல்

அரிய சமயம் வாய்த்த போது செய்ய உரியதை உடனே செய்து உய்க என்னும் இது இங்கே நன்கு சிந்திக்கத்தக்கது.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

செத்து வீழுமுன் சீவனுக்(கு) ஓர்நலன்
ஒத்த தாக உணர்பவர் உத்தமர்;
முத்தர் பெற்றவர்; மூடர் பெறாதவர்
பித்தர் பேதையர் பேயர் பிசாசரே.

இதனை ஈண்டு உய்த்து ஓர்ந்துணர்ந்து கொள்ளுக.

எடுத்த பிறவியைக் கொண்டு அடுத்த பிறவி அடையாமல் செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யவில்லையானால் அது அவலப் பிறப்பாயிழிந்து கொடிய கவலைக்கே இடமாகும்.

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிதரிதுகாண்
இப்பிறவி தப்பினா லெப்பிறவி வாய்க்குமோ
எதுவருமோ அறிகிலேன்
கண்ணகல் நிலத்துநான் உள்ளபொழு தேஅருட்
ககனவட் டத்தில்நின்று
காலூன்றி நின்றுபொழி யானந்த முகிலொடு
கலந்துமதி யவசமுறவே
பண்ணுவது நன்மைஇந் நிலைபதியு மட்டுமே
பதியாயி ருந்ததேகப்
பவுரிகுலை யாமலே கௌரிகுண் டலியாயி
பண்ணவிதன் அருளினாலே
விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
வேண்டுவேனு மதடிமைநான்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச்சித் தர்கணமே. 4 சித்தர்கணம், தாயுமானவர்

மானுடப் பிறவி பெறுதலரிது; பெற்றால் அது கொண்டு ஆன்ம வுய்தியைப் பெற வேண்டும்; அந்தப் பேறுதான் பேரானந்தமாகும் எனத் தாயுமானவர் இங்ஙனம் உரைத்துள்ளார்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(இரட்டை ஆசிரிய விருத்தம்)
(மா மா காய் காலடிக்கு)

எண்ணி லாத நெடுங்காலம் எண்ணி லாத பலபிறவி
..எடுத்தே இளைத்திங்(கு) அவைநீங்கி இம்மா னிடத்தில் வந்தித்து
மண்ணின் வாழ்க்கை மெய்யாக மயங்கி யுழன்றால் அடியேனுன்
..மாறாப் பெருமை தரும்பாத வனசத் துணையென்(று) அடைவேனே?
கண்ணின் மணியே உயிர்க்களியே கருணைப் புயலே சுகக்கடலே
..கச்சித் தாய்உச் சியைமோந்து கண்ணோ(டு) அணைக்கும் திருத்தாளா
புண்ணி யோர்எண் ணியகரும்பே பொழிமும் மதவா ரணமுகத்தோன்
..பொற்பார் துணையே அற்புதனே போரூர் முருகப் பெருமாளே !

- திருப்போரூர்ச் சந்நிதிமுறை

பிறவிகள் அளவிடலரியன; அவற்றுள் மனிதப் பிறவி பெறுதல் மிகவும் அரிது, அரிய அதனைப் பெற்றால் பெரியவனை நாடிப் பேரின்ப நிலையைப் பெற வேண்டும்; அதுதான் சிறந்த பிறவியின் உயர்ந்த பேறாம்; அப் பேற்றை விரைந்து பெறுக எனச் சிதம்பர சுவாமிகள் இவ்வாறு குறித்துள்ளார்.

நினைவு செயல்களால் வினைகள் விளைகின்றன; அவை நல்லனவாயின் புண்ணியங்களாய் இன்பங்களை அருளுகின்றன; தீயனவாயின் பாவங்களாய்த் துன்பங்களே தருகின்றன. இருவினைகளும் மருவியே மனிதன் பிறந்துள்ளானாதலால் சுக துக்கங்களை எவ்வழியும் அவன் அனுபவிக்கின்றான். வினையால் விளைந்து வினைப்போகங்களை நுகர்ந்து வருதலால் தேகம் வினைப்போகம் என நேர்ந்தது. ஊழ்வினையே உயிர் வாழ்வில் உலாவி வருகிறது.

Life is a bumper filled by fate. (Blacklock)

உயிர் வாழ்வு விதியால் நிறைந்த ஒரு பாண்டம் என்னும் இது ஈண்டு ஓர்ந்து உணரவுரியது. அயல் நாட்டு அறிஞரும் வினையின் விளைவுகளை எண்ணி வருவது வியப்பை விளைத்து வருகிறது. கரும பிண்டம் மருமமாய்க் காண வந்தது.

மண்பாண்டம் போல் மனித தேகம் மருவியுளது. எப்படியும் உடைந்து போய் விடும்; அது உடையுமுன்னரே அடைய வேண்டியதை விரைந்து அடைந்து கொள்ள வேண்டும்.

நேரிசை வெண்பா

மண்ணின் கலம்போல் மருவிய தேகமே
கண்ணிமைபோல் ஆவியைக் காத்துளகாண் - நண்ணியது
நிற்கும் பொழுதே நிலையான பேரின்பப்
பொற்குன்றம் காண்க புகுந்து.

இதன் பொருளைக் கூர்ந்து ஓர்ந்து தேர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-21, 8:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே