பிறப்பும் இறப்பும் மறப்பின்றி மாறி வரலால் வரவுநிலை உய்ய அருளும் உணர்வு - இறப்பு, தருமதீபிகை 921

நேரிசை வெண்பா

பிறப்பும் இறப்பும் பிரியாமல் என்றும்
மறப்பின்றி மாறி வரலால் - வறப்பின்றி
வையம் வழங்கி வருமால் வரவுநிலை
உய்ய அருளும் உணர்வு. 921

- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சீவர்களுடைய பிறப்பு இறப்புகளை மருவி இந்த உலகம் என்றும் குன்றாமல் வளமாய் இயங்கி வருகிறது; அந்த வரவில் அரிய உறுதி நலங்களை அறிவு தெளிவாய் அருளியுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகில் தோன்றுகின்ற உருவத் தோற்றங்கள் சிலகாலம் நிலவியிருந்து பின்பு மறைந்து போகின்றன. அவ்வாறு மறைவதையே இறப்பு என்று நாம் குறித்து வருகிறோம். அறுதியாய் இறுதியுறுவது இறப்பு என வந்தது. பிறந்த எதுவும் இறந்து படுவது முடிந்த முடிவாய் நின்றது.

பிறப்பும் இறப்பும் விழிப்பும் உறக்கமும் போல் இயல்பாய் இணைந்து எவ்வழியும் தொடர்ந்து பிணைந்துள்ளன. பகல் இரவு, நினைப்பு மறப்பு, விழிப்பு உறக்கம் எனப் பிறப்பு இறப்புகள் பிரியா இரட்டைகளாய் மருவியிருக்கின்றன.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339 நிலையாமை

பிறப்பு இறப்பைக் குறித்து வள்ளுவர் இவ்வாறு விளக்கி யிருக்கிறார். உறங்கலும், விழித்தலும் மனித வாழ்வில் நாள் தோறும் தொடர்ந்து நடந்து வருகின்றன. தெளிவான அந்த அனுபவ நிலைகளை ஒப்புக்காட்டி இறத்தல் பிறத்தல்களின் தொடர்புகளை நயமாய்த் துலக்கி யருளினார். உறங்குதல் சாதலையும் விழித்தல் பிறத்தலையும் முறையே உணர்த்தியுள்ளது; இந்த உண்மையை உணர்ந்து உயிர்க்கு நன்மையைச் செய்து கொண்டால் விழிப்பதுபோல் மீண்டும் பிறக்கின்ற உயிர் செழிப்பாய்ச் சிறந்து வரும் என்பது தெரிய வந்தது.

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது. 16 மணிமேகலை

சாதுவன் என்னும் அறிஞன் சாதல் பிறத்தலை இங்ஙனம் ஆதரவான போதனையோடு குறித்திருக்கிறான். இயல்பாக மாறி மாறி நிகழும் என்பதை உவமானம் தெளிவாக்கி நின்றது.

To die: to sleep; no more. (Hamlet 3, I)

சாவது ஒருவகை உறக்கமே என இதுவும் குறித்துள்ளது.

இன்னிசை வெண்பா

இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு. 302 இரவச்சம், நாலடியார்

கண்மூடிக் கண் திறப்பது போல் இறப்பும் பிறப்பும் விரைந்து நிகழ்கின்றன; அழிவுடைய இந்த வாழ்வில் இழிவான காரியங்களைச் செய்யாமல் நல்ல மானத்தோடு வாழவேண்டும் என மதிநலங்களைத் துலக்கி இது இங்ஙனம் உணர்த்தியுள்ளது.

சாவை நூலோர் நினைவுறுத்துவது தனது வாழ்வை மனிதன் சால்போடு நன்கு நடத்த வேண்டும் என்று கருதியேயாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

துறக்கமே முதல ஆய தூயன யாவை யேனும்
மறக்குமா நினையல் அம்மா! வரம்பில தோற்றும் மாக்கள்
இறக்குமா(று) இதுஎன் பான்போல் முன்னைநாள் இறந்தான், பின்நாள்,
பிறக்குமா(று) இதுஎன் பான்போல் பிறந்தனன் பிறவா வெய்யோன். 50

- கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

சூரியன் மறைந்து பின்பு உதயமான நிலையைக் கவி இங்ஙனம் வரைந்து காட்டியிருக்கிறார். பிறந்தவன் எவனும் இறந்து போவன்; அவ்வாறு இறக்கு முன் உயிர்க்கு உயர்ந்த உறுதி நலனை அடைந்த கொள்ளுக என மாந்தர்க்கு அறிவு போதிக்கும் பொருட்டு முதல் நாள் இறந்தது போல் மறைந்து மறுநாள் பிறந்தது போல் ஆதவன் தோன்றினான் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. கதி நிலை காணக் கதிரவன் காட்டினான்.

பகலும் இரவும் போல் பிறப்பும் இறப்பும் இயல்பாய்த் தொடர்ந்து நிகழ்ந்து வரும் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். நல்லது தீயது என்னும் இருவகை வினைகளைச் சீவர்கள் செய்து வருதலால் அவற்றின் பயன்களான இன்ப துன்பங்களை முறையே அனுபவித்து வருகின்றனர். அவ்வரவில் பிறத்தலும் இறத்தலும் பிறழாமல் பெருகித் தொடர்கின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து
வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள்
தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே
மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. 4 - 018 பிரமாணவியல், இரண்டாஞ் சூத்திரம், சிவஞான சித்தியார், திருநெறி 2

சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தி னாகு
மாதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லா நுண்ணுணர் வின்மை யன்றே
பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான். 269 நாமகள் இலம்பகம், சீவகசிந்தாமணி

இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்த வினைதரத் தெரிந்த அன்றே?
புறத்தினி உரைப்ப(து) என்னே? பூவின்மேல் புனிதற் கேனும்,
அறத்தின(து) இறுதி, வாழ்நாட்(கு) இறுதி;யஃ(து) உறுதி, அன்ப! 15 அரசியல் படலம், கிட்கிந்தா காண்டம், இராமாயணம்

வீதலும் பிழைத்தல் தானும் விதிவழி யன்றி நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ நின்னில்வே(று) அறிஞர் உண்டோ
பூதலந் தன்னில் யாவர் புதல்வரோ(டு) இறந்தார் ஐயா
சாதலிங்(கு) இயற்கை யன்றென்(று) அருளுடன் தடுத்த காலை. 13-151 பாரதம்,

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பிறந்த ஆகமொன்(று) இறந்திடாப் பெருமையும் உடைத்தோ
எறிந்த வான்சிலை வீழ்ந்திடா(து) இருப்பதிங் கில்லை;
செறிந்த காரியம் என்பதென் றாயினும் சிதையும்
இறந்தி டாதுகா ரணமெனப் படுமதே என்றும். – பிரபுலிங்க லீலை

தரவு கொச்சகக் கலிப்பா

சூழ்ந்தனஎல் லாம்பிரியும்; தோன்றினஎல் லாம்நசிக்கும்;
தாழ்ந்திடுமற் றுயர்ந்தவெல்லாம்) தனிநகரும், மாளிகையும்
பாழ்ந்துடவைப் படும்அனுமான் பழுத்தபழம் தனக்கென்றும்
வீழ்ந்திடலே கதியானால் விளியாதோ சரீரம்தான். – சேது புராணம்

இறப்பு நிலைகளை இவை குறித்து வந்துள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள்களோடு உறுதியான உணர்வு நலங்களைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். வாழ்வின் உண்மைகளை உணர்ந்து தெளிந்த அளவு மனிதன் மகானாய் உயர்ந்து திகழ்கிறான். சாவின் நினைவு ஆவதை விரைந்து அடையச் செய்கிறது.

பிறந்த மனிதன் சிறந்த அறிவோடு வளர்ந்து வாழ்ந்து வருகிறான்; அவ்வாழ்வு சாவை நோக்கியே நடந்து வருகிறது. நேர்ந்த ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கழிந்து வருதலை ஓர்ந்துணராமையால் உள்ளம் களித்து மேல் நோக்காய் வியந்து திரிகிறான். சாவின் வாயிலுள்ள நிலைமையைச் சிறிது உணர்ந்தாலும் அவன் ஆவிக்கு இனியனாய் ஆவதைச் செய்து கொள்ளுவான். சாதலை உணர்வதே ஓதலின் உயர் பயனாம்.

நிலையாமை நிலையை நேரே தெரிபவனே தலையான ஞானி ஆகி, அழியாத பேரின்ப நிலையை எளிதே அடைந்து கொள்ளுகிறான். இறத்தலை எதிரறிந்தவன் மீண்டு பிறத்தலை மேவாதபடி விவேகமாய்ப் பிழைக்க நேர்கின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கணமும்நீ சாகின் றாயே! கருதியந் நிலையை ஓர்ந்து
குணமுடன். வாழ்க; வாழ்ந்தால் கூற்றுவன் உன்பால் அன்பு
மணமுடன் புரிந்து நேரே மாறிலா இன்பந் துய்ப்பன்;
பிணமென உடலம் வீழப் பேரின்பம் பெறுவாய் நீயே.

இதனை உரிமையோடு ஓர்ந்து சிந்திக்க வேண்டும்.

சாவின் நினைவு வாழ்வினை ஒழுங்கு செய்து உயர்த்தி வர உதவி புரிகிறது. எதிரே ஒர் அபாய அறிவிப்பைக் கண்டவன் முன் எச்சரிக்கையாய் உபாயம் சூழ்ந்து இதமாய்ச் செல்வான்; அதுபோல் மரண நிலையை அறிந்தவன் உயிர்க்கு உறுதியாய் அரணம் சூழ்ந்து அதி விரைவாய் உரம் செய்து கொள்வான்.

Death is as the foreshadowing of life. We die that we may die no more. [H. Hooker]

மரணம் உயிர் வாழ்வின் முன்னறிவிப்பாயுளது; இனிமேல் சாவில்லை என்று நாம் சாகிறோம் என்னும் இது இங்கு அறிய வுரியது. இறப்பின் அறிவு பிறப்பின் பயனைப் பெற உதவுகிறது.

கரும்பிலிருந்து சாரம் பிழிந்து கொண்டபின் அதன் சக்கை எரிந்து போங்கால் யாரும் வருந்தார்; அதுபோல் பிறந்த இந்த உடம்பின் பயனை அடைந்து கொண்டால் இறந்து போகும் போது எவரும் பரிந்து வருந்தமாட்டார்.

நேரிசை வெண்பா

பெற்ற பிறப்பின் பெரும்பயனைப் பெற்றவர்
மற்ற இறப்பின் மறுகுவரோ - உற்ற
பலனடைந்த பின்பு பயிரழியின் யாரே
புலனழிந்து நிற்பர் புலந்து.

இதில் வந்துள்ள உவம நிலையை ஓர்ந்து உறுதி நலனைத் தேர்ந்து கொள்க. வாழ்வாங்கு வாழ்பவன் சாவுக்கு அஞ்சான்.

நல்ல சிந்தனையோடு புனிதமாய் வாழுகின்றவனுக்கு இம்மையும் மறுமையும் இனிமை சுரந்து இன்ப நிலையமாகின்றன. வையக வாழ்வைவிட வானக வாழ்வு அவனுக்கு மேன்மையாய் வந்து, தேவ ஒளி அவன் பால் மேவி மிளிர்கிறது.

மரணத்துக்கு அவன் அஞ்சுவதில்லை; அதனை இயற்கை நிகழ்ச்சியாய் மகிழ்ச்சியோடு கருதி உறுதியாய் நிற்கிறான்.

Death has nothing terrible which life has not made so. (T. Edwards)

வாழ்க்கையில் கொடுமை இல்லையானால் அந்த மரணத்தில் யாதொரு திகிலும் இல்லை என்று இது குறித்துள்ளது.

சாவையும் வாழ்வையும் ஒருங்கே இணைத்து உறுதியுண்மைகளை உணர்த்தியுள்ள இதை ஈண்டு நன்கு சிந்திக்க வேண்டும்.

மனம், மொழி, மெய் புனிதமாய் நாளும் நயனோடு ஒருவன் வாழ்ந்துவரின் அவ்வாழ்வு கண்ணியம் நிறைந்த புண்ணிய வாழ்வு ஆகி, தேவபோகம் அவனை அணுகி நிற்கிறது; எடுத்த தேகத்தைக் கழித்து விடுவதில் களிப்பே மிகுதலால் இறப்பு அவனுக்கு உவப்பையே தருகிறது.

ஈண்டு வந்து பிறந்த மனிதன் மீண்டும் பிறந்து இறந்து உழலாமல் சிறந்த பேரின்ப வாழ்வை அடைந்து கொள்ளும்படி பிறப்பு குறிப்போடு உணர்த்தியுள்ளது; அந்த உண்மையை ஊன்றியுணர்ந்து விரைந்து நன்மை பெறுக.

பிறந்தாய் இருந்தாய் பெயர்ந்திறந்து போமுன்
அறந்தான் அடைக அறிந்து.

ஆருயிர்க்கு உரிய இனிய அமுதம் அறிய வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-21, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே