அரிய பிறப்பை அடைந்த மனிதன் நாடி வரின் நலன்கள் ஓடி வருமே உவந்து - சிறப்பு, தருமதீபிகை 931

நேரிசை வெண்பா

அரிய பிறப்பை அடைந்த மனிதன்
உரிய சிறப்பை உணர்ந்து - பிரியமுடன்
நாடி வரினோ நலன்கள் அவனிடம்
ஓடி வருமே உவந்து. 931

- சிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தான் அடைந்துள்ள மனிதப் பிறப்பு மிகவும் அருமையுடையது; அரிய இந்த உடல் உள்ள பொழுதே அடைய வுரியதை உணர்ந்து ஒருவன் புனிதமாய் முயன்று வரின் இனிய பல நலன்கள் எளிதே வந்து சேரும்; அந்த வரவு ஆனந்த நிலையமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறந்த பிறவிப் பயன் மிகவும் சிறந்தது; அதனை விரைந்து விழைந்து புரிந்து கொள்வது உயர்ந்த நன்மையாம்.

பெற்ற பொருளின் பெருமையைத் தெளிவாயறிந்த போதுதான் எவரும் அதனை உரிமையோடு பேண நேர்கின்றார். வழி முறையே தொடர்ந்து வந்த இழிதுயரங்கள் யாவும் நீங்கி விழுமிய நிலையை அடைவதே அறிவுடைய பிறவிக்கு அமைந்த பயனாம். துக்கங்களை ஒக்க நீக்க வல்ல பெருமை மக்கள் உருவில் மருவியிருத்தலால் மனிதப் பிறவி மிகவும் அருமை என வந்தது.

விலங்கு பறவை முதலாகத் தோன்றியுள்ள பிராணிகள் யாவற்றினும் மனித மரபிடம் சிறந்த அறிவுகள் இயல்பாய் நிறைந்திருக்கின்றன; ஆகவே மானுடப் பிறப்பு பெறலரும் பேறாய்ப் பெருமை மிகப் பெற்றது. அருமை பெருமைகள் எல்லாம் அறிவு ஆண்மைகளால் உரிமையோடு தெளிவாய் வெளி வருகின்றன.

அரிய பல நிலைகளைக் கருதியுணரவும், உறுதியாயுணர்ந்ததை ஒழுங்காய்ச் சொல்லவும், சொல்லிய வகைகளைச் சூழ்ந்து செய்யவும் வல்லமை வாய்ந்திருத்தலால் மனிதன் எல்லாம் புரிய வல்லவன் போல் எவ்வழியும் செவ்வையாய் இசைபெற்று நிற்கின்றான்.

உணர்ச்சி மிகுந்த உயர் பிறப்பை அடைந்தும் உண்மை நிலைகளை ஓர்ந்து தெளிந்து உய்தி பெறாமல் புன்மைகளில் இழிந்து புலையாய் உழலுதல் நிலையான மாய மயக்கமாய் நிலவி வருகிறது.

அரிய பிறவிக்கு உரிய பயனை அறிபவன் பெரிய மகானாய்ப் பேரின்பம் உறுகிறான்; அவ்வாறு அறியாதவன் அவகேடனாயிழிந்து அவலமாய் அழிகின்றான். நல்ல அறிவுடைய பிறப்பைப் பெற்றவன் அதைக் கொண்டு அல்லல்களை நீக்கிக் கொள்ள வில்லையானால் அத்தோற்றம் பழி படிந்து பாழ்படுகிறது. வீணப் பிறப்பாய் விளிந்து போகாமல் விழுமிய சிறப்பை அடைந்து கொள்பவன் வித்தக முத்தனாய் நன்கு விளங்கி நிற்கின்றான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பேரஞர் இடும்பை யெல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆரமிர்(து) அரிதிற் பெற்றாம் அதன்பயன் கோடல் தேற்றாம்;
ஓருமைம் பொறியும் ஓம்பி யுளபகல் கழித்த பின்றைக்
கூரெரி கவரும் போழ்திற் கூடுமோ குறித்த வெல்லாம். 348 நாமகள் இலம்பகம், சீவகசிந்தாமணி

மனிதப் பிறப்பு மதிநலம் உடையது; எல்லா இடும்பைகளையும் ஒருங்கே நீக்க வல்லது, அரிய அமுதம் போன்ற இவ்வுடம்பை பெரிய தவத்தால் பெற்றிருக்கிறோம்; பெற்றும் உரிய பயனை அடையாமல் பொறிநுகர்வுகளை அவாவி வெறிகொண்டு வீணே திரிகிறோம்; செத்துச் சுடு காட்டில் உடல் வேகும் போது உயிர்க்கு ஏதேனும் பலன் உண்டா? துயர்க்கே வழிசெய்து அழிவது கொடிய பழியாம்; நெடிய மடமையாம் என இது குறித்துள்ளது.

’ஆர் அமிர்து அரிதில் பெற்றாம்’ என்றது மனித தேகம் கிடைத்தற்கரிய மகிமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது. அரிய இனிய அமுது பெற்றவன் அதனை வறிதே இழந்து கழிவது பெரிய பரிதாபமாம்; ஆகவே தேகம் உள்ள பொழுதே தேகி திவ்விய நிலையை அடையும்படி செய்து கொள்ளுக.

சிறந்த கருவி கரணங்கள் வாய்ந்து அறிவு நலங்கள் தோய்ந்து நெறிமுறைகள் அமைந்த பிறவியை அடைந்தும் தன் உயிர்க்குறுதி நலனை அடையாமல் ஒழியின் அந்த மனித வாழ்வு மாட்டு வாழ்வினும் கடையாய் இழிந்து படுகிறது.

மேலான சிந்தனைகளை இழந்தவன் கீழான நிந்தனைகளை அடைந்து அழிகிறான் பொறி நுகர்வுகளில் வெறி மிகுந்து அலைபவர் உறுதிநலன்களை உணராது ஒழிகின்றார். ஈன இச்சைகள் மனிதனை ஈனன் ஆக்கிவிட மனிதன் மிருகமாய் மருவி எவ்வழியும் வெவ்வினைகள் புரிந்து இழிந்து வாழ்கிறான்.

When man is a brute, he is the most sensual. (Howthorne)

சிற்றின்பத்தில் மிகுதியாய் இழிந்த பொழுது மனிதன் மிருகமாய்த் திரிகிறான் என்னுமிது இங்கே அறியவுரியது.

காம இச்சையில் ஆழ்ந்தவன் நேம நியமங்களை இழந்து விடுகிறான்; நெறி முறைகளை விலகிய அளவு அறிவிழந்த விலங்குகளாய் மனிதர் இழிந்து மாண்பிழந்து கழிந்து போகின்றனர்.

சிற்றின்ப ஆசை பேரின்ப நிலையை நாசம் செய்யுமாதலால் அந்தப் புலையான இன்பத்தைத் தொலையாத துன்பமாக மேலோர் கருதி விலகி உறுதி கூர்ந்து உயர்வு தோய்ந்துள்ளனர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 2 மா தேமா அரையடிக்கு)

இன்பமிதாம் இன்பமிதாம் என்ற எல்லாம்
எரிஎனநஞ்(சு) எனநினைக ஏற்றத் தாழ்வாய்த்
துன்புறுபோ கம்பலகால் தேர்ந்து நெஞ்சில்
தோயாமல் எளிதருந்தின் சுகமே ஆகும்;
வன்புபயில் மனத்தோற்றம் நாசம் ஆகும்
மனத்தினது நாசமேம கத்தாம் தோற்றம்;
நன்பரம ஞானிகள்நெஞ்(சு) இறந்து போகும்
நடைவிலங்காம் அறிவிலர்க்கு நவைகூர் நெஞ்சம். 2 தாசூர, ஞானவாசிட்டம்

தெளிந்த ஞானிகள் நிலையையும், இழிந்த பேதைகள் புலையையும் இதனால் உணர்ந்து கொள்கிறோம். விடய சுகங்களைக் கொடிய விடம், நெடிய துக்கங்களாக நினைக என்றது அவற்றின் நீசங்களை நினைந்து உய்தி காண வந்தது.

நீ உயர்ந்த பிறப்பில் பிறந்துள்ளாய்; உனது நிலைமையை உணர்ந்து தலைமையான சிறப்பை நன்கு அடைந்து கொள்ளுக.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

மனித தேகம் மருவ அரியது;
பனியின் நீர்எனப் பாழ்படும் பாலது;
புனித போதம் பொருந்தி விரைவினில்
வினையின் நீங்கி வியன்கதி காணுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-21, 4:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே