போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றங் கொண்டோடும் பொழுது - நாலடியார் 120

நேரிசை வெண்பா
(’ஞ்’ ‘ங்’ மெல்லின எதுகை)

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
(றி)யாங்கணும் தேரின் பிறிதில்லை: - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது 120

- மெய்ம்மை, நாலடியார்

பொருளுரை:

ஆராய்ந்தால், தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணை வருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை,

கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக் கொண்டு செல்லும் பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்து கொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.

கருத்து:

செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.

விளக்கம்:

ஆங்கு, பிறிதெதுவும் துணை வராதது போல என்னும் பொருட்டு;.

போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-21, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே