நிரயத்துச் சென்று வீழ்வார் மூவர் - திரிகடுகம் 45

நேரிசை வெண்பா

ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி
யேற்றார்க் கியைவ கரப்பானும் - கூற்றம்
வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச் சென்றுவீழ் வார் 45

- திரிகடுகம்

பொருளுரை:

(தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவலாளனை செய் என்று ஏவி வருத்துகின்றவனும்,

தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு (கொடுப்பதற்கு) இசையும் பொருளை அன்பு இல்லாதவனாகி மறைத்து இல்லையென்று சொல்லும் செல்வனும்,

யமன் வருதலது உண்மையை நினையாமல் தீமையைச் செய்தோனும் ஆகிய இம் மூவரும் உடல் அற்று நீங்கி நரகத்தில் விழுவார்

கருத்துரை:.

செயல்வலி அற்ற ஏவலாளனை வேலை வாங்குவோனும், இரந்தவர்க்கு இயைந்ததில்லை யென்று சொல்வோனும், இறப்பை நினையாது தீத்தொழில் புரிவோனும் நரகத்து வீழ்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Nov-21, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே