பெண்ணின் இடைதனக்கு நுண்மை வனப்பாம் - சிறுபஞ்ச மூலம் 6

நேரிசை வெண்பா

படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம் - நடைதனக்குக்
கோடா மொழிவனப்புக் கோற்கதுவே சேவகர்க்கு
வாடாத வன்கண் வனப்பு. 6

– சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நால்வகைப்படைக்கு யானைப் படையே அழகாகும்.

பெண்களின் இடைக்கு நுட்பமான மெலிந்த இடையே அழகாகும்.

ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு நடுநிலை தவறாத சொல்லே அழகாகும்.

செங்கோலுடைய மன்னனுக்கும் அந்தக் கோடா மொழியே அழகாகும்.

போர் வீரர்க்கு குன்றாத வீரமானது அழகாகும்.

கருத்துரை:

சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், தனி ஒருவன் ஒழுக்கத்துக்கும், அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-21, 11:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே