காத்துண்பான் காணான் பிணி - சிறுபஞ்ச மூலம் 7

நேரிசை வெண்பா

பற்றினான் பற்றற்றா னூறவசி; யெப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்வனூற் - பற்றினாற்
பாத்துண்பான் பார்ப்பான்; பழியுணர்வான் சான்றவன்;
காத்துண்பான் காணான் பிணி 7

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

எல்லாப் பொருள்களிலுங் கலந்து நின்றே அவற்றிற் சார்பில்லாதவனாகிய கடவுளாற் செய்யப்பட்ட முதனூலை கடைப்பிடித்து ஒழுகுகின்றவன் வீடு பேற்றை விரும்பி நோற்பவனாவான்;

எல்லாப் பொருளையும் முற்றவுணர்ந்தவன் எல்லார்க்குந் தலைவனாவான்;

நூல்களிற் கூறப்பட்ட அறங்களைக் கைக்கொள்வதனால், தன் மனைக்கு வரும் விருந்தினர் முதலியவர்களை யுண்பித்துத் தானும் உண்கின்றவன் அந்தணனாவான்;

பழிக்கு ஏதுவான செயல்களை அறிந்து விலக்குவோன் அறிவா னிறைந்த பெரியோனாவான்;

உடற்கு பொருந்தாத உணவுகளை மறுத்து உண்பவன் நோய் கொள்ளான்.

கருத்துரை:

பற்றற்றான் - தொடர்பற்றவனாகிய முழுமுதற் கடவுள்;

பற்றற்றான் நூல் என்பது இறைவன் ஓதிய வீட்டு நூல்.

எப்பொருளையும் உணர்ந்தவன் பலரையும் நல்லாற்றுப்படுத்துந் திறனுடையனாகவே அவனை யாவருந் தலைமகனாகக் கொண்டு போற்றுவார் என்பார், ‘எப்பொருளும் முற்றினானாகு முதல்வன்’, என்றார்.

பழியை யறிந்து நீக்குவோன் எல்லாராலும் பாராட்டப்படுஞ் சிறப்புடையவனாதலிற் சான்றோன் எனப்பட்டான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-21, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே