தம்மடைந்தார்க்கு உற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் – நீதிநெறி விளக்கம் 40

நேரிசை வெண்பா

களைகணாத் தம்மடைந்தார்க்(கு) உற்றுழியும் மற்றோர்
விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் – தளர்நடைய(து)
ஊனுடம்(பு) என்று புகழுடம்(பு) ஓம்புதற்கே
தானுடம் பட்டார்கள் தாம் 40

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

இறைச்சியாலாகிய இவ்வுடல் பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றால் நிலைதளருந் தன்மையுடையது என்று கருதி அதனால் அதை வெறுத்து, நிலைதளராத புகழ் உடம்பினை வளர்க்கவே தீர்மானித்தவர்கள்,

தம்மை ஆதாரமாக அடைந்தவர்க்கு சிறிது துன்பம் வந்தவிடத்தும் வேறொரு பயனைக்கருதி பயனில்லாத தமது ஊன் உடம்பினைப் பாதுகாக்க நினையார்.

விளக்கம்:

அரசர்க்கரசன் சிபி, புறாவின் பொருட்டுத் தன்னுயிர் கொடுத்ததும்,

தேவர் துன்பம் நீங்கத் ததீசி முனிவர்தம் முதுகெலும்பு ஈந்ததும்,

பாபர் தம்மகன் பிழைக்க வேண்டி அவனுக்கு வந்த காய்ச்சலை ஒருபெரியார் கூறியபடி தாம் ஏற்றுத் தம் மகனுயிர் காப்பாற்றியதும் புகழுடம்பு விரும்புவார் தம் ஊனுடம்பைப் பொருட்படுத்தார் என்பதற்குத் தக்க சான்றாகும்.

களை கண் – நீக்குமிடம்,

கருத்து: புகழை விரும்புகின்றவர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தம்மையடைந்தோர்க்கு உற்ற துயரை ஒழிப்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-21, 6:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே