அறிவுடையார் குறுகார் மூன்று - திரிகடுகம் 46

இன்னிசை வெண்பா

கால்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் - சீறிக்
கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார் 46

- திரிகடுகம்

பொருளுரை:

நடையில் தூயது ஆகுந்தன்மை இல்லாத குதிரையும்,

கட்டுத்தறியை முறித்து வீரன் இருப்பதற்கேற்ற மேலிடம் தூயதாம் தன்மை உடையதாயிராத கொடிய யானையும்;

மாணாக்கன் மேல் வைரமடைந்து சீற்றங்கொண்டு சினந்து பாடம் சொல்லுவோனுடைய கல்விச்சாலையும் ஆகிய இம்மூன்றையும் அவற்றின் பயனின்மையை உணர்தலுடையார் சேரார்.

கருத்துரை:

நடைச் சிறப்பற்ற குதிரையும், ஏறிச்செல்ல உதவாத யானையும், முகமலர்ச்சியுடன் கூறாதான் பள்ளியும் வீண் என்பது.

கால்: எண்ணலளவை யாகுபெயராகிய கால் என்பது முதலாகு பெயராய் நடையை யுணர்த்தியது.

இந் நடை ஐவகைப் படும். அவை : மென்னடை, விரைநடை, ஆடுநடை, சுற்றுநடை, ஓட்டநடை,

கலிமா - கலினமா என்பது னகரந்தொக்கு மருவியது போலும்.

கலினம் - கடிவாளம்: கலிக்கின்ற மா என்னலுமாம்.

கலித்தல் – கனைத்தல்; சீற்றம் - சிறிது பொழுது நிகழும் சினம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-21, 8:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே