கடனீந்திக் கற்றடியு ளாழ்ந்து விடல் - பழமொழி நானூறு 26

நேரிசை வெண்பா

விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப்
படர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக்
கற்றடியு ளாழ்ந்து விடல். 26

- பழமொழி நானூறு

பொருளுரை:

விடுதற்கரிய வலிமை உடைய பற்றினை முற்ற அறுத்து ஒழுகுதற்கரிய நல்ல துறவற நெறியின்கண் நின்றவர்கள் பசி நோய் வந்துற்றதாக அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல் கடலினை நீந்திக் கன்றினது குளம்படி நீரினுள் அமிழ்ந்து விடுவதை யொக்கும்.

கருத்து:

துறவற நெறியில் நின்றார் எக்காலத்தும் புலால் உண்ணல் ஆகாதாம்.

விளக்கம்:

விடலரிய துப்புடைய வேட்கை எனப் பற்று விடுதலின் அருமையும், 'படர் வரிய நன்னெறி' எனத் துறவற நெறியடைதலின் அருமையும் குறிப்பித்தார்.

தானே வந்தெய்தினும் நுகர்தல் ஆகாது என்பார், 'பெற்ற விடக்கு' என்றார்.

விடுதற்கரிய ஆசைக் கடல்களெல்லாம் நீந்திச் சென்றார், பசிநோய் பொறாது புலாலுண்ணுதல், கடல் நீந்தினார் கன்றின் குளம்படி நீரில் நீந்த முடியாது அமிழ்தலை யொக்கும். அவரது நிலையை இழித்துவிடும் என்பதாயிற்று.

பட்ட பாடெல்லாம் பயனிலதாய் முடியும்.

'கடனீந்திக் கற்றடியுள் ஆழ்ந்துவிடல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 12:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே