வெறுப்பனவே செய்யும் நரகர்கட் கில்லையோ நஞ்சு - பழமொழி நானூறு 27

நேரிசை வெண்பா

தேர்ந்துகண் ணோடாது தீவினையும் அஞ்சலராய்ச்
சேர்ந்தாரை யெல்லாம் சிறிதுரைத்துத் - தீர்ந்த
விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட் கில்லையோ நஞ்சு. 27

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆராய்ந்து கண்ணோட்டம் செலுத்தாது அஞ்சவேண்டிய தீய செயல்களுக்கும் அஞ்சாதவராய், தம்மைச் சேர்ந்தார் எல்லோரையும் சிறுமைப்படப்பேசி நெருங்கிய உறவினர்கட்கு எல்லாம் வெறுப்பானவைகளையே செய்யும் நரகம் புக இருக்கின்றவர்களுக்கு (அவர் உயிரை உண்ணும்)விடம் உலகில் இல்லையோ?

கருத்து:

இத்தகைய கீழ்மக்கள் இருப்பதைவிட இறப்பதே நன்று.

விளக்கம்:

கண்ணோடாது என்பது, தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுத்தல். முறையே அயலார், உயிர்ப் பிராணிகள், நட்டார், உறவினர் முதலியோர்கட்கெல்லாம் இவர் தீங்கு செய்து ஒழுகுதலின், இவரைக் கொல்லவல்ல நஞ்சு இல்லையோ என்றார்.

இவர் நரகம் புகுதல் உறுதியாதலின் அவ்வுலகத்து மக்களாகவே கருதி நரகர் என்றார்.

'நரகர்கட்கு இல்லையோ நஞ்சு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 12:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே