புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு – நாலடியார் 121

புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு – நாலடியார் 121
இரு விகற்ப நேரிசை வெண்பா
(’ல்’ இடையின ஆசு) (’க்’ ‘ல’ எதுகை)

துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
பு’ல்’லறி வாளர் வயிறு 121

- தீவினையச்சம், நாலடியார்

பொருளுரை:

உலகத்திலுள்ள சுடுகாடுகள் வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி, அவற்றினின்று நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார்ந்தொழுகாத கீழ்மக்களின் பிணங்களையுடையன;

ஆனால் நல்லறிவு கெட்ட புல்லறிவாளரின் வயிறுகளோ தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இடுகாடுகளாய் இருக்கின்றன.

கருத்து:

பிற உயிர்களைக் கொன்றுண்ணுந் தீ வினைக்கு அஞ்சுதல் வேண்டும்.

விளக்கம்:

அருளொழுக்கமுடைய சான்றோர் நோய்கொண்டு மறையாமல், செயற்கருஞ் செயல்கள் செய்து தூயராய் மறைதலால் அவர்கள் மறையும் இடம் புனிதமாகப் போற்றப்படுகின்றது.

‘சுடுகாடுகள் நல்லொழுக்கம் இல்லாதவர்களின் பிணங்களையுடையன' எனப்பட்டது.

அம்மக்களினும் இழிந்தனவான சிற்றுயிர்களின் பிணங்களையுடையன புல்லறிவாளர் வயிறுகள் என்க.

பல காலுந் தின்று உள்ளே செலுத்துதலின் ‘தொக்க' எனவும், நல்லோர் கூறும் அறவுரைகளையேனுங் கேட்டொழுகுதலில்லாமையின் ‘புல்லறிவாளர்' எனவும் உரைக்கப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 1:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே