காப்பிகழல் ஆகாப் பொருள் மூன்று – திரிகடுகம் 47

இன்னிசை வெண்பா

சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந்
தாளினால் தந்த விழுநிதியும் - நாடோறும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழல் ஆகாப் பொருள் 47

- திரிகடுகம்

பொருளுரை:

மெல்லிய சொல்லையும், பெரிய தோள்களையுமுடைய பெண்டிரும், பலவகையாலும் முயற்சியினால் தேடிய சிறப்பாகிய பொருளும், எப்பொழுதும் நாக்கு நீர் ஊறும்படி சமைத்த உணவும் ஆகிய இம்மூன்றும் தக்கபடி பாதுகாத்தலை தாழ்த்திக் கூறுதலாகாத பொருள்களாம்.

கருத்துரை:

பெண்டிரும், பொருளும், உண்டியும் தக்கபடி காப்பாற்று முறையில் காப்பாற்றப் படாமற் போனால் கெட்டுப்போம் எனப்பட்டது.

சிறுசொல் என்பது சில்சொல் என்றாயிற்று; சிறுமை நிரம்பாமை; விழுநிதி : பண்புத்தொகை நிலைத்தொடர்.

தோறு: ஏழாம் வேற்றுமை; இடப் பொருண்மையையும் பன்மையையும் உணர்த்தும் இடைச்சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-21, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே