பொறிகெடும் நாணற்ற போழ்தே – நான்மணிக்கடிகை 44

இன்னிசை வெண்பா

பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்
நண்பினார் நண்பு கெடும் 44

- நான்மணிக்கடிகை

முதல் மூன்றடிகளிலும் தனிச்சொல் அமைந்திருக்கிறது.

பொருளுரை:

ஒருவனுக்கு நாணமென்பது நீங்கின போதே செல்வம் அழியும்;

தன்வழிப்பட்ட ஐம்பொறிகளால் தீவினைகள் தாமாகவே ஒழியும்;

நீரைப் பெறாத பசும்பயிர்கள் பொய்க்காத விளைவின் நன்மை கெட்டொழியும்;

நண்பின் நலம் மாறினால் நண்பரின் நட்பியல்பு கெட்டுப்போம்.

கருத்து:

நாணம் நீங்கினாற் செல்வங் கெடும்; ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் வினை கெடும்; நீரற்றாற் பசும் பயிர்களின் விளைவின் நலம் கெடும்; நன்மை மாறினால் நட்புக் கெடும்.

விளக்கவுரை:

நாணம் என்பதை ஒழுக்கம் என்றும் கொள்ளலாம்;

‘பொறி கெடும் நாணற்ற போழ்தே' என்பதைக் கயிறற்ற போதே பாவை கெடுமென் றுரைப்பாரும் உளர்.

நெறிபட்ட ஐவராலென்பதை ஐவர் நெறிபட்டாலென மாறுக.

நெறிபடல் - தன்வழிப்படல்; வினை - பிறவிக்கு ஏதுவான தீவினை.

தானே என்பதனால் முயற்சியின்றியே கெடுமென்பார்,

பயிர்க்குப் பெய்யா நலமென்பது, நீர் பாய்ச்சி முறையாய்ப் பயிரிட்டால் அது சிறிதுந் தவறாமற் றருங் கதிர் முதலிய விளைபொருட் பயன்களென்க.

நண்பர்க்கு நலமாவது. உற்றுழியுதவலாம்; .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-21, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே