அம்மை யிழைத்த இம்மையுங் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயல் – இன்னிலை 6

நேரிசை வெண்பா

அம்மை யிழைத்த தலைப்பட் டழிவாயா
இம்மையுங் கொண்டுறுத்து மீர்ம்பெயலா - மும்மை
யுணர்ந்தார் திருவத்த ரோரார் உழண்டைத்
தளைப்படுவர் தட்பந் தெறார். 6

- இன்னிலை

பொருளுரை:

முற்பிறப்பில் செய்த வினைகள் அப்பிறப்பிலேயே செய்தவனை சென்றடைந்து பயன்களை நல்கி கெட்டுப் போதலைப் பொருந்தி முடிந்து விடுமா என்றால் போகாது. இப்பிறப்பினும் தொடர்ந்து வந்து, கூதிர்க்கால மழைக்கு ஒப்பாக, நன்மை, தீமைப் பயனை யடையச் செய்யும்;

முற்பிறப்பில் செய்த வினைப்பயனை இப்பிறப்பிலடைய வேண்டும். இப்பிறப்பிற் செய்யும் வினைப்பயனை இனி வரும் பிறப்பில் அடையவேண்டும், என்று மூன்று பிறவிகளின் உண்மையையும் அறிந்தவரே செல்வமுடையாராவார். இவ்வுண்மையை எண்ணிப் பார்க்காத அறியாதவர் துன்பத்தின் மயங்கி நிற்பார்; பாசங்களை அறுக்கமாட்டார்.

கருத்து:

மறுபிறவியுண்டு; நல்வினை தீவினைப்பயன் நம்மை வந்து சேரும் என்று முக்காலங்களையும் அறியும் சான்றோரே பிறவியை நீக்கி முக்தியடைவர்.

விளக்கம்:

ஒருவன் ஒரு பிறப்பில் செய்த நல்வினை தீவினைக்குப் பயனாக இன்பதுன்பங்களை அவன் அப்பிறப்பிலேயே அடைவான்; முற்பிறப்பில் செய்த வினைப்பயன் இப்பிறப்பில் எவ்வாறு வந்தெய்தும்? அது பொய் என்பதை நோக்கி "அழிவாயா" என்றார்.

வினைப்பயனை அப்பிறவியில் ஒருவன் அடைவதும் அல்லாமல் அடுத்த பிறவியினும் அடைவன் என்பது தோன்ற "இம்மையுங் கொண்டுறுத்தும்" என உம்மை கொடுத்தார்.

ஈரம் பெயல் என்பது ஈரத்திற் பெய்யும் மழை எனப் பொருள்படும்.

கார்ப்பருவத்தை யடுத்துக் கூதிர்ப்பருவம் (ஆதலால் அப்பருவத்திற் பெய்யுமழையை யுணர்த்தியது. பருவமழை பெய்து நிலம் ஈரம் ஆனபோது மேலுமேலும் விடாமல் மழைத்துளி விழும் காலமே கூதிர்க்காலம்) ஆகும்.

கூதிர் என்பது வாடைக்காற்றை உணர்த்தும் ஆயினும் இடைவிடாமழையால் குளிர் பொறுக்க முடியாத காலம் என்பது தோன்றக் கூதிர்ப் பருவமெனப் பெயர் பெற்றது.

கூதிரிற் பெய்யும் இடைவிடா மழை போல முற்பிறப்பில் செய்த வினைப்பயன் இப்பிறப்பில் இடையீடின்றி வந்து செய்தவனை நுகர்விக்கும். ஆதலால் ஈரம் பெய்தலை உவமை கூறினர்.

இப்பிறப்பில் ஒருவன் அடையும் இன்பதுன்பங்கள் முற்பிறப்பிற் செய்த வினைப்பயன் என்றும், செய்யும் வினைகள் அடுத்த பிறவிக்கும், அவன் அடையும் இன்ப துன்பங்கட்கும் காரணமாவன என்றும் உணர்ந்து பிறவியை நீக்கக் கருதியவனே முக்திச் செல்வம் பெறுவான் என்பது தோன்ற 'மும்மையுணர்ந்தார் திருவத்தர்" என்றார்.

அறியாதவர் பிறவித்தளையை விட்டு நீங்கார் என்பதை விளக்க ஓரார், தெறார் என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-21, 1:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே