அறியலமொன் றாற்ற எனைத்து மறியாமை யான் – ஏலாதி 10

மூன்றாம் நான்காம் அடியில் மெல்லின எதுகை (அ’மை’ச்சர், எ’னை’த்தும்) அமைந்த நேரிசை வெண்பா

செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமுஞ் சீரிலா
வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல்
அமைச்சர் தொழிலும் அறியலமொன் றாற்ற
எனைத்து மறியாமை யான் 10

- ஏலாதி

பொருளுரை:

முறை செய்யும் அரசனும், அவன் கீழ்வாழும் குடிகளும், அவர்தம் செல்வங்களும், முறைமை இல்லாத கொடுங்கோலரசனும், அவன் கீழ் வாழுங் குடிகளும், (செங்கோல்) இவை தமக்கெல்லாம் ஏதுவான செங்கோ லமைச்சர்களுங் கொடுங்கோலமைச்சர்களும், அவரவர் தொழில்களும் ஒருங்கே அழிந்தொழியவும் சிறிதும் அறிய முடியாமையினால் இவை தமக்குரிய ஏதுவை முற்றத் தெரிகின்றிலம்.

பொழிப்புரை:

செங்கோலானது செல்வமும், அவன் கீழ்வாழுங் குடிகளது செல்வமும்,

வெங்கோலானது கேடும், அவன் கீழ் வாழுங் குடிகளது கேடும்,

வெங்கோலமைச்சரது கேடும், அவர் தொடங்கிய வினை முடியாது கெடுதலும், இவ்வாறினையுமொரு திறனறிய மாட்டோம். யாதும் எமக்கறியப் பொருந்தாமையின்.

கருத்து:

நல்லோரும் வீழ்கின்றார், தீயோரும் வீழ்கின்றாரானமையின், இவற்றின் ஏது ஏதோ அறிகின்றிலமென்பது.

அறியலம் என்றார், உலக நிலையாமைக்குரிய மலத்தின் வலியைச் சுட்டி; மலத்தின் பரப்பும் ஆற்றலும் வரம்பிட்டுணரலாகாமையின், ‘ஆற்ற அறியல' மென்று அறியாமை கூறுமுகத்தால் அவை தம்மை விளங்க வைத்தார் என்க. ஈண்டுக் கூட்டியுரைக்க வேண்டுவனவெல்லாங் கூட்டிக்கொள்க. ‘வீந்துகவும்' என்பதை ‘உக்கு வீயவு' மென்று விகுதி பிரித்து மாற்றுக. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-21, 10:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே