மெய்ப்பொருள் கண்டு வாழ்வார் மூவர் - திரிகடுகம் 48

நேரிசை வெண்பா
(’த’ ’றெ’ ’றி’ வல்லின எதுகை) ’ய்’ (இடையின ஆசு)

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர்
மெ’ய்’ப்பொருள் கண்டுவாழ் வார் 48

– திரிகடுகம்

பொருளுரை:

ஒருவன் வைததை இனிய சொல்லாகக் கொள்கின்றவனும்,

நெய் வார்த்த சோறு இது என்று கூழை மதிக்கின்றவனும்,

கைக்கின்ற பொருளை வெல்லக்கட்டி என்று தன் வாயில் ஊறும்படி உண்கின்றவனும்

ஆகிய இம் மூவரும் உண்மையாகிய பரம் பொருளைக் கண்டு வாழ்பவர் ஆவார்.

கருத்துரை:

வன்சொல்லை மென்சொல்லாகவும், கூழைப் பாற்சோறாகவும், கைப்புணவை இனிப்பு உணவாகவும் கருதுகின்றவர் மெய்ப்பொருள் உணர்ந்தவர்.

மெய்ப்பொருள் உணர்ந்தவர்கட்கு உடலுக்கும் உயிருக்குமுள்ள குண வேற்றுமைகள் தெரியுமாதலால் வைதல் உடலையன்றி உயிரைச் சேராதென்றும்,

கைப்பும் இனிப்பும் மண்ணின் நிலைகளேயன்றி உண்மையல்லவென்றும் அறிந்ததனால்,

அறிவில் வேற்றுமையில்லை யென்று தோன்றி உடம்பின்மேல் பற்று இல்லாதது பற்றி அவற்றைப் பாராட்டார் என்பது.

கூழ் - புல்லரிசி, ஊறிய கைப்பதனை என்று கொண்டு ஊறிய என்பதற்கு மிகுந்த என்றும் பொருள் கூறலாம்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 8:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே