காத்திரம் மண்ணில் விழுந்துவிடும் வாழ்விதனை எண்ணிச் செருக்கல் இடர் - இறப்பு, தருமதீபிகை 924

நேரிசை வெண்பா

சூத்திரம் நின்றவுடன் தோல்பாவை வீழ்வதுபோல்
ஆத்திர மானவினை அற்றவுடன் - காத்திரம்
மண்ணில் விழுந்துவிடும் மாயமாம் வாழ்விதனை
எண்ணிச் செருக்கல் இடர். 924

- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆட்டும் கயிறு நின்றவுடன் ஆடிவந்த தோல்பாவைகள் வீழ்ந்து விடும்; அதுபோல் வினைத்தொடர்பு அற்றவுடன் உடல்கள் மண்ணில் மாய்ந்து விழும்; இத்தகைய மாய வாழ்வை நிலை என்று எண்ணிக் களித்தல் தொலையாக துன்பமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சூத்திரம் - இரகசியமாய் இணைந்திருக்கும் கயிறு.
ஆத்திரம் - ஆசை மீதூர்ந்த அவசரம்.
காத்திரம் - கரணங்கள் மருவிய உடல்.

வினைகளின் விளைவாகவே பிறவிகள் விளைந்து வந்துள்ளன. அவற்றின் போகங்களை அனுபவித்து முடிந்தவுடன் உயிர்கள் நீங்கி தேகங்கள் செயலிழந்து கிடக்கின்றன. அந்தக் கிடைதான் இறப்பு, சாவு இழவு, மரணம், முடிவு என்று பல பெயர்களால் சொல்லப் படுகிறது.

கயிறு அறுந்தவுடன் பாவைகள் செயலிழந்து விழுந்து விடுகின்றன; உயிர் பிரிந்தவுடன் உடல்கள் அடலழிந்து படுகின்றன. தோலால் செய்த பாவைகள் ஆட்டம் ஓய்ந்து கிடப்பதுபோல் ஆவி நீங்கிய தேகங்களும் அவலமாயிழிந்து கிடக்கின்றன. காக்கையும், கழுகும், நாயும், நரியும், பேயும் தின்னும் இரை என்று யாக்கைகள் இழிவாய்ப் பேசப்பட்டுள்ளன.

நேரிசை வெண்பா

ஒன்பதுவாய்த் தோல்பைக்(கு) ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள்
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு. - பட்டினத்தார்

கழுகுகளுக்கு இரையாயுள்ள ஒன்பது துளைகளையுடைய தோல்பை எனப் பட்டினத்தார் இங்ஙனம் உடம்பைச் சுட்டி இகழ்ந்திருக்கிறார். உடல் பிணமாய் விழுமுன் உயிர்க்குறுதி நலனத் தேடிக் கொள்ள வேண்டும் என்றே பலரும் பாடியிருக்கின்றனர். காயம் மாயப் பொய் எனக் கவிகள் காட்டியுள்ளன.

’ய்’ ஆசிடையிட்ட நேரிசை வெண்பா

தோ’ற்’போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீ’ப்’போர்வை மாட்சித் துடம்பானால் – மீ’ப்’போர்வை
பொ’ய்’ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும். 42

- தூய்தன்மை, நாலடியார்

பல துவாரங்களுடைய தோல் போர்வையால் மூடியுள்ள உடம்பின் உண்மை நிலையை நாடியுணர்ந்து உயிர்க்குறுதியை விரைந்து தேடுக என இது வரைந்து உணர்த்தியுள்ளது.

ஆன்ம ஊதியம் அதிசய மேன்மையாய்த் துதி செய்ய நின்றது. உயர்ந்த பிறவிப் பயன் என மேலோர் புகழ்ந்து போற்றுவது உயிர் சிறந்த கதியில் ஏற்றமாய் விளங்கி நிற்பதையே.

நேர்ந்த பிறப்பில் உயிர்க்கு நிலையான தலைமையை அடைந்து கொண்டவன் நித்திய முத்தன் என நிலவி நிற்கிறான். பிறப்பின் பயனைச் சிறப்பாகப் பெற்றவன் இறப்பை உவப்பாய் எதிர் நோக்கி இராச கம்பீரமாய் இனிது வாழுகின்றான். ஆவிக்கு ஆன இனிய பலனை அடைந்தவன் அரிய ஞான வீரனாகி, சாவுக்கு யாதும் அஞ்சாமல் சீவ ஒளி நிறைந்து தேசு மிகுந்து திவ்விய நீர்மையில் மிளிர்கின்றான். இறப்பை அஞ்சாதவரே என்றும் துஞ்சாதவராய் இசை மிகப் பெறுகின்றார்.

புனித வாழ்வு மனிதனை மகான் ஆக்கி இனிய வானுலகத்தில் உய்த்தலால் அவன் எவ்வழியும் திவ்விய நிலையில் சிறந்து திகழ்கிறான். அச்சமும் அவலமும் நீங்கிச் சீவன் உச்ச நிலையை அடைவதே உயர்ந்த மனித வுருவை மருவிய சிறந்த பயனாம்.

He that lives to live forever, never fears dying. (Penn)

என்றும் நித்திய வாழ்வு வாழ்கிறவன் சாதலை யாதும் அஞ்சான் என இது போதனை செய்து குறித்திருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்பவன் தேவனாக நேர்ந்துள்ளமையால் மேவிய உடல் நீங்குவதை விழைந்து நிற்கின்றான். வாழ்வைப் பழுதாக்கி நாளை வீணே கழித்தவன் சாக நேருங்கால் ஆவி குலைந்து அல்லலுழந்து அழிதுயரடைகின்றான்.

இறந்து படுவோம் என்று எல்லாருக்கும் தெரியும்; ஆயினும் மதிகேடராய் அதனை மறந்து விடுகின்றனர். இன்ன நேரம்தான் சாவு நேரும் என்று முன்னதாக யாரும் அறிய முடியாதாதலால் நாளும் நல்லதையே பழகிவரின் அவ்வாழ்வு சாவை அஞ்சாத தேவ வாழ்வாய்ச் சிறந்து தெளிவு மிகுந்து விளங்கும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

நெல்லறுக்க வோர்கால மலர்கொய்ய வோர்காலம்
..நெடிய பாரக்
கல்லறுக்க வோர்கால மரமறுக்க வோர்காலக்
..கணித முண்டு
வல்லரக்க னனையநம னினைத்தபோ தெல்லாநம்
..வாழ்நா ளென்னும்
புல்லறுக்க வருவனெனில் நெஞ்சமே மற்றினியாம்
..புகல்வ தென்னே. 6

முற்றியபின் கனியுதிரும் பழுப்புற்றுத் தழையுதிரும்
..முழுது மேநெய்
வற்றியபின் விளக்கவியு மென்னவோர் திடமுண்டு
..மக்கள் காயம்
பற்றியவக் கருப்பத்தோ பிறக்கும்போ தோபாலப்
..பருவத் தோமூப்
புற்றபின்போ வீழ்வதென நிலையின்றே லிதன்பெருமை
..யுரைப்ப தென்னே. 7

- யாக்கை நிலையாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்

மனித வாழ்வின் நிலையை இவை இனிது காட்டியுள்ளன. காட்சிகளைக் கருதி உணர்ந்து இறுதி நேருமுன் உயிர்க்கு உரிமையான உறுதி நலங்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உயிர்வாழ்வு உயிர்ப்பு அளவில் உலாவி வருகிறது. புறத்தே நீண்ட மூச்சு அகத்தே மீண்டு வருவதே ஈண்டு வாழ்வாயுள்ளது. வெளியே போனது உள்ளே மீளாதொழியின் அதுவே அழிவாம். அந்த இறப்பு நிலையைக் குறிப்போடு கூர்ந்து ஓர்ந்து பிறப்பின் பயனைச் சிறப்பாக விரைந்து செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-21, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே