காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல் அறிவுடையோர் செயல் - அறநெறிச்சாரம் 42

நேரிசை வெண்பா

காய்த லுவத்த லகற்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையோர் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணந் தோன்றாத தாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும். 42

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

வெறுக்கப்படும் பொருளிலுள்ள நல்ல குணம் ஆராய்பவனுக்குத் தோன்றாது.

விரும்பப்படும் பொருளின் மீதுள்ள குற்றமும் தோன்றாது மறையும்.

ஆதலால், வெறுப்பு விருப்பை விலக்கி, ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல் அறிவுடையார் செயலாகும்.

இப்பாடல் பொதுவான அறிவுரையாகக் கூறப்பட்டாலும், கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும், உறவில் ஒருவர் மீது மற்றவர் கூறும் புறங்கூறலை மதியாது ஆராய்ந்து பார்த்து குற்றத்தை விலக்கி, குணங்களை மதித்து வாழ்வை வளப்படுத்த வேண்டும் எனப்படுகிறது.

பதவுரை:

காய்வதன்கண் உற்ற - வெறுக்கப்படும் பொருளிலுள்ள,

குணம் தோன்றாததாகும் – குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது.

உவப்பதன்கண் – விரும்பப்படுவதன்கணுள்ள,

குற்றமும் தோன்றாக் கெடும் - குற்றமும் தோன்றாது மறையும்,

ஆதலால்,

காய்தல் உவத்தல் அகற்றி - வெறுப்பு விருப்பு இல்லாமல்,

ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்தறிதல்,

அறிவுடையோர் கண்ணதே - அறிவுடையார் செயலாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-21, 8:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே