வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு - நாலடியார் 125

நேரிசை வெண்பா

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு 125

- தீவினையச்சம், நாலடியார்

பொருளுரை:

சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்;

கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்து ஒழியும்.

கருத்து:

சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.

விளக்கம்:

முழுத்திங்கட்கு ‘மதி' எனவும், குறைத்திங்கட்குப் ‘பிறை' எனவும் வரும் சொல் வழக்குக் கருத்திருத்துதற்குரியது.

வான் ஊர்தல் பிறைக்கும் உரியதேனுஞ் சிறப்பு நோக்கி மதியத்துக்கு அடைமொழியாக வந்தது.

இச் செய்யுளின் உவமமும் பொருளும்

'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு' 782 நட்பு

என்னுந் திருக்குறளில் உள்ளவாறே உள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 2:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே