முரணஞ்சிப் போவாரே உண்ஓட் டகலுடைப் பார் - பழமொழி நானூறு 28

நேரிசை வெண்பா

தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் - டேமாப்ப
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
உண்ஓட் டகலுடைப் பார். 28

- பழமொழி நானூறு

பொருளுரை:

தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார் பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி எதிர்த்து நிற்கவும் பயந்து சேமமாக முன் ஓடுதலை மேற்கொண்டு செல்பவர்கள் தாம் உண்கின்ற ஓடாகிய உண்கலத்தை உடைப்பாரோ டொப்பர்.

கருத்து:

தம்மால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதார் தமக்குச் சார்பானவரைச் சினந்து கூறலாகாது.

விளக்கம்:

தமக்குச் சார்பாயிருந்தாரைச் சினந்து கூறுபவர், தாம் உண்கின்ற பாத்திரத்தை உடைப்பாரோ டொப்பர்.

'ஓட்டுக் கொண்டு போவார்' என்றமையின், அவரால் பயன்பெறா தொழிதலேயன்றித் துன்புறவும் நேரிடும் என்பது பெறப்படும்.

'உண்ணோட் டகலுடைப்பார்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 3:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே