காப்ப தில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது - பழமொழி நானூறு 29

இன்னிசை வெண்பா

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது. 29

- பழமொழி நானூறு

பொருளுரை:

முழுதுலகத்தையும் முன்னே உண்டாக்கியவன் நமக்காக அல்லலையும் படைத்தான் என்று நினைத்து இஃது அவனாலேயே நீங்கும் போலுமென்று நினைத்து அவனையே தொழுதுகொண்டு முயற்சியின்றி யிருப்பின் துன்பம் நீங்குமோ?

முதலில் ஓலையைப் பழுதுபட எழுதியவன் தாம் குற்றம் செய்தவனாக அறிந்தபின் செய்த குற்றத்தைப் பாதுகாப்பதில்லை. (உடனே நீக்குவன் என்பதாம்.)

கருத்து:

துன்பம் தெய்வத்தால் வந்ததாயினும் அதனை நீக்க முயற்சி செய்க.

விளக்கம்:

ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரினிடம் செல்லாது அவ்வுயிர்க்கே வகுத்தலின் அவன் வகுத்தான் எனப்பட்டான்.

ஆகவே, இவ்வல்லலை நீக்கவேண்டுமென்று தொழுததினால் அதற்குப் பரிந்து நீக்கான் என்பதாம்.

ஆகவே அவனைத் தொழுது நீக்கிக்கொள்ள முடியாது, தம்மாலாகிய முயற்சி செய்தே அதனை நீக்கல் வேண்டுமென்பதாம்.

'இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 3:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே