இம்மைக்கு உறுதியில்லார் மூவர் – திரிகடுகம் 49

இன்னிசை வெண்பா

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்(கு) உறுதியில் லார் 49

- திரிகடுகம்

*ஏவியது

பொருளுரை:

பெற்றோரால் ஏவப்பட்ட எந்தக் காரியத்தையும் தன்னால் முடியாதென மறுக்கின்ற புதல்வனும்,

மனைவியைக் காவாமல் திட்டி இகழ்ந்து பேசுகின்ற கணவனும்,

பொய்ம்மொழியை ஆராய்ந்து சொல்லி தான் வாழ்கின்ற வீட்டின் செல்வத்தை அழிக்கும் மனைவியும் ஆகிய இம்மூவரும் இப் பிறப்பில் எவருக்கும் பயனில்லாதவர் ஆவர்.

கருத்துரை:

ஏவிய சொற்கேளா மக்களும், மனைவியைப் போற்றாக் கணவனும், வீட்டுப் பொருளை வீணே அழிக்கின்ற மனைவியும் இம்மையில் எவருக்கும் பயனற்றவர்.

ஏவாதும் ஆற்றும் இளங்கிளை என்று கொண்டு சொல்லாத காரியத்தையும் தன் விருப்பம்போல் செய்கின்ற புதல்வன் எனலுமாம்.

ஆது: யாது என்பதன் மரூஉ; தலைமகன் - கணவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-21, 3:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே