பூயல் படுக்குந் திருவத்தனார் – இன்னிலை 8

நேரிசை வெண்பா

தூயசொல் லாட்டுந் துணிவறிவுந் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு மடிச்சேரா வாறு. 8

- இன்னிலை

பொருளுரை:

தூய்மையான சொற்களைப் பேசுவதும், அறிஞர் உண்டென்று ஆய்ந்து துணிந்தபொருளை யறிவதும்,

கவலைகள் வந்து பொருந்தியபோது மனங்கலங்காத அளவு உற்ற துணையின் வலிமை பெற்றிருப்பதும் ஆகிய இவற்றை பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினையுடையவரே அடுக்கி வருகின்ற பிறவியில் சேராதவாறு அதனைக்களைவர்.

கருத்து:

தூயசொற் பேசுதலும், செம்பொருட்டுணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான் என்பது.

விளக்கம்:

தூயசொல் என்பது பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனில்சொல் என்ற நான்கினையும் நீக்கிப் பேசுஞ் சொல்லையுணர்த்தியது. வாய்மையும் இன்சொல்லும் ஆகும்.

துணிவு அறிவு என்பது துணிவினை அறியும் அறிவு எனப் பொருள்படும். கடவுள் உண்டு, இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, முத்தி, நரகம் இவையுண்டு என்று சான்றோர் துணிந்தவற்றைத் தானும் அறிந்து கொள்ளல்.

குறிப்பு:

பூயல் - பொருந்துதல். மடி - வயிறு; இது பிறவியை உணர்த்தியது.

"உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்"

என்று வள்ளுவர் கூறியபடி உண்டென்பது இல்லையென்பவன் மனிதனல்லன். அவன் ஒரு பேய்; ஆதலால் அறிஞர் உண்டு என்பதை உண்டு என்று துணிபவனே மக்களில் ஒருவனாக மதிக்கப் படுவான்

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை,
அடுத்தூர்வ தஃதொப்ப தில்"

என்று வள்ளுவர் கூறி யாங்கு மனமகிழ்வுடன் நகை முகங்கொண்டு துன்பத்தைப் போக்க வேண்டுமே யன்றிக் கலங்குதல் கூடாது.

கலங்குவோன் தான் செய்யும் வினையைக் காலமறிந்து செய்யாமற் கைவிடுவான். அதனாற் கலங்காத அறிவும் வேண்டும் என்பது கருத்து.

இம்மூன்றும் உடையவன் எவனோ அவன் பிறவியைக் களைந்து முத்தியடைவன் என்பது சொல்லப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 2:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே