மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் பண்பறிந்தோர் சால்பு – இன்னிலை 9

ஒரு விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா.

கடன்முகந்து தீம்பெயலை யூழ்க்கு மெழிலி
மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. 9

- இன்னிலை

பொருளுரை:

மேகமானது கடலினுள்ள உப்பு நீரை முகந்து நன்னீராக்கி இனிய மழையாகப் பெய்வதைப் போல, அறியாமை உடையவரது குற்றங்களைப் போக்கி நற்குணங்களை அவர்கள் பெறச் செய்வதும், அவர்களுக்கு காவலாக வேண்டியவற்றை உண்டாக்கித் தருவதும் நற்பண்புகளை அறிந்த பெரியோர்களின் செயல் ஆகும்.

கருத்து:

மேகம் கடல் நீரையுண்டு மழை பொழிந்து உலகத்தாரைக் காப்பது போலச் சான்றோர்களும் மக்களிடத்துள்ள அறியாமையை யகற்றி அவரைக் காப்பது கடமையாகும்.

விளக்கம்:

மேகம் கடலிலுள்ள உவர் நீரை மாற்றி நன்னீராக்கி மழை பொழிகிறது. அதுபோலச் சான்றோர்கள் மக்களிடத்துள்ள அறியாமையைக் கேட்டு அறிந்து அறிவுரை வழங்குவர்.

மேகம் மழை பெய்து பின் எவ்வாறு பலவகையான உணவு உடைக்குரிய பொருள்களை வளரச் செய்கின்றனவோ அதுபோலச் சான்றோரும் அறிவுரை வழங்கி மக்களுயிர்க்குக் காவலாகிய செயல்கள் செய்வித்து வளர்ப்பர். ஆதலால் மேகம் சான்றோருக்கு உவமையாயிற்று.

ஏமம் - காவல், இன்பம். இன்பமெனப் பொருள் கொண்டு இன்பத்திற்குரியவற்றை உண்டாக்குவதும் வளர்ப்பதும் என்றும் கொள்ளலாம்.

உயிர்க்குக் காவலாகிய செயலாவன. "கடவுள் வணக்கம்; அறம் புரிதல், முத்திக்குரிய நெறியறிதல் முதலிய நற்செயல்களாம். இவற்றை வளர்த்துப் பெருக்குவது உயிர்கள் பிறப்பிலுழன்று நரகஞ் சேர விடாது தடுப்பதனால் காவலாயிற்று.

இன்பத்திற்குரிய செயலும் இதுவேயாம். சான்றோர், மக்களது அறியாமையை நீக்கி அறிவுரை வழங்கி அதனால் நற்செயல் புரிவித்துக் காப்பர் என்று கூறினர் எனப்படும்.

குறிப்பு:தீ - இனிமை. எழிலி முகந்து பெயலை ஊழ்க்கும் எனவும், பண்பறிந்தோர் சால்பு, அகற்றி உறுத்தல், படைத்து ஆக்கல் எனவும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே