கசடறக் கற்பது மிக இனிதாகும் - இனியவை நாற்பது 1

இன்னிசை வெண்பா

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைகொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1

– இனியவை நாற்பது

பொருளுரை:

பிச்சை எடுத்து உண்ண வேண்டிய நிலையிலும் கற்பனவற்றைக் கசடறக் கற்பது மிக இனிதாகும்.

அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல கற்றோர் சபையில் தமக்கு நினைவில் முன்வந்து நிற்பது மிகவும் இனிது பயக்கும்.

முத்தையொக்கும் பற்களையும், புன்முறுவலையும் உடைய மகளிரது வாய்ச்சொல் இனிதாகும்.

அதுபோல, நற்குணமுடைய பெரியோரைத் துணைக் கொள்வது மிகவும் இனிமையுடைய தாகும்.

நற்சவை - நல்லோர் கூடியிருக்கும் சபை, ஏர் –அழகு, தெற்றவும் - மிகவும்

கைக்கொடுத்தல் - கற்றன எல்லாம் வேண்டு முன் நினைவிற்கு வந்து நிற்றல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே