பாத்தில் புடைவை உடை இன்னா - இன்னா நாற்பது 2

இன்னிசை வெண்பா
(’ப்’ ‘த்’ வல்லின எதுகை) (’ர்’ இடையின ஆசு)

பா’ர்’ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆ’ர்’த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு. 2

- இன்னா நாற்பது

பொருளுரை:

பார்ப்பாருடைய வீட்டில் கோழியும் நாயும் நுழைவது துன்பம் பயக்கும்.

கல்யாணம் செய்து கொண்ட மனைவி கணவனுக்கு அடங்கி நடக்காதிருப்பது மிகவும் துன்பம் தரும்.

பகுப்பு இல்லாத மெல்லிய புடைவையை உடுத்துவது துன்பம் தரும்.

அது போல, நாட்டைக் காப்பாற்றாத மன்னன் அமைவதும் துன்பம் தரும்.

ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர்பு உண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலை யுணர்த்திற்று.

அடங்காமை - எறியென்று எதிர் நிற்றல் முதலியன.

பாத்து - பகுத்து என்பதன் மரூஉ

புடைவை – ஆடவர் உடையையும் குறிக்கும்.

‘பாத்தில் புடைவை யுடையின்னா' என்றதனாற் சொல்லியது ஒற்றை ஆடையாக உள்ளுறுப்பு தெரியும்படி ஆடை உடுத்துதல் ஆகாதென்பதாம்.

காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-21, 4:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே