காத்திருப்பின் தாகமும் எதிர்பார்ப்பின் நீளமும்

காத்திருப்பின் தாகமும் எதிர்பார்ப்பின் நீளமும்
==================================================
நான் காற்றாக ஓடி வந்து
காத்திருக்கும் வேளை யெல்லாம் நீ என்
புல்லாங்குழல் துவாரங்களை அடைத்து வைக்கிறாய்

நான் ஊற்றாக ஓடி வந்து
சலசலக்கும் வேளையெல்லாம் நீதான்
பாலைவன பூமியாகிக் குடித்துத் தீர்க்கிறாய்

நான் இன்றாக இருந்த வேளை
நேற்றாக மாறியெனை
காத்திருக்க வைத்து விட்டாய்

இனிநான் நாளையாகிக் காத்திருப்பேன்

உன் நேற்றுகளைக் கடந்து நீ வரும்
என் பாதையில்
காற்றைக் கிழித்து எதிர்திசையில் பயணிக்கும்
விமானத்தைபோல்
உன்னை உன் திசையில் சந்திக்கத் துணிந்துவிட்டேன்

நான் துணிந்துவிட்டேன் என்பதற்காக
நீயும் துணிச்சலுடன்
உன் கண்களை விற்று என்
பார்வையை வாங்க வந்து விடாதே!.
காத்திருப்பின் தாகமும்
எதிர்பார்ப்பின் நீளமும்
சிறு புன்னகையில் தீர்ந்துவிடும்
உன் சந்நிதியில் சரணடையக் காத்திருக்கும்
என் நிம்மதியை பரிசளிப்பாயா.. தெய்வமே!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Dec-21, 2:57 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 222

மேலே