தெருட்டாயம் காலத்தாற் சேரான் பொருட்டாகான் – இன்னிலை 15
நேரிசை வெண்பா
குருட்டாயன் நீள்கானங் கோடல் சிவணத்
தெருட்டாயங் காலத்தாற் சேரான் - பொருட்டாகான்
நல்லறமும் பேணானா நாரமுவர்த் தானாம்
பொல்லாங் குறைவிடமாம் புல். 15
– இன்னிலை
பொருளுரை:
யாவரையும் தெளிவிக்கின்ற பொருள் வருவாயை இளமைப் பருவத்திலேயே சேர்க்காதவன், கண்குருடாகிய ஆடு மேய்க்கும் இடையன் நீண்ட அடர்ந்த காட்டினை தன் ஆடுகளை மேய்ப்பதற்கு இடமாகக் கொள்வதை ஒப்ப, ஒரு பொருளாக மதிக்கப்படான்.
நல்ல அறங்களையும் செய்ய விரும்ப மாட்டான். மக்கட் கூட்டத்தால் வெறுக்கப்பட்டவன் ஆவான், தீமைகள் யாவும் தங்குவதற்கு இடமாவான், இழிவானவன் ஆகும்.
கருத்து:
இளமையிற் பொருள் தேடாதவன், குருட்டாயன் காட்டில் ஆடு மேய்த்தது போல வாழ்வில் இடர்ப்பட்டுப் பிறரால் மதிக்கப்படாமல் இழிவாக வாழ்வான்.
விளக்கம்:
செல்வம் மக்களின் மயக்கத்தை நீக்கி மனத்தைத் தெளிவுபடுத்தும் என்ற கருத்தினால் தெருட்டு ஆயம் என்றார். ஆயம் – பொருள் வருவாய்.
ஆயன் எனற குறிப்பினால் ஆடு மேய்ப்பதற்கு என்பது வருவிக்கப்பட்டது.
காடு கண்ணுக்கெட்டாத தூரமுள்ளது என்பதனால் "நீள் கானம்" என்றார். குருட்டிடையன் நீண்ட காட்டில் ஆடுகளை மேய்த்து அவற்றை ஒருவழிப் படுத்தித் தானும் அவற்றின் பின் வந்து வீடு சேரமுடியாதது போல, பொருளில்லாதவனும் தன் வாழ்விற்குரிய பொருள்களைக் கூட்டி ஒருவழிப்படுத்தி நல்வாழ்வு நடத்தி முத்தியிற் போய்ச் சேர முடியாது எனப்படுகிறது.
பொருட்டு - பொருள். உயிராகிய பொருளையுடையது என்று பொருள் தரும்.
உயிர்ப்பொருளாக மதிக்கப்படான் என்பது கருத்து.
நாரம் - மக்கட் கூட்டம். உவர்த்தான் - வெறுக்கப்பட்டவன்.
புல் என்பது புல்லன், புல்லியன் என்ற பொருளைத் தந்தது.