சமுதாயத்தின் இரு கறைகள்
புது வருடம் பிறக்குது வேகமாக ஓடி ஒளியுது;புது எண்ணங்கள் பிறக்குது சட்டென பறக்குது;நாணயம் தோன்றிய பின் நாணயம் நலிந்தது பின் கருப்பு பணம் உதித்தது ஆனால் இன்னமும் மறையவில்லை;ரேஷன் கார்டிலிருந்து கார் லைசென்ஸ் வரை; நிலம் வாங்குவதிலிருந்து வீடு பதிவுவரையில்;லஞ்சம் இன்றி ஒரு காரியமும் முடிவதில்லை;பழைய நிலம் வீடு விற்கையில் கருப்பு பணம் ஒரு கையிலிருந்து வேறு கைக்கு சேருகிறது;என்ன ஒரு பொருளாதாரம், என்ன ஒரு களவு! பின்பு எப்படி குறையும் பணவீக்கம்? எவ்வாறு கூடும் பொருளாதார வளம் சொல்லுங்கள்?
வருத்தப்படவேண்டிய செய்தி என்னவெனில் பொருளாதார நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர் பலரும் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்; பலரிடம் கருப்பு பணம் என புகார் கூறுவோர் தானே கருப்பு பணம் புழங்க ஏதுவாகிறார்கள்; இன்னும் மோசம், நேர்மையாக இருப்பவரை
நீங்களும் ஊருலகத்துடன் ஒத்து வாழுங்கள்,நேர்மையாக இருக்கிறேன் என்று மற்றவரை கெடுத்துவிடாதீர்கள் என உபதேசிக்கிறார்கள். எங்கு போய் சொல்ல?
எல்லா பணத்தையும் கணக்கில் காட்டினால் வருமான வரி துறை அவரை நிம்மதியாக இருக்க விடாது எனவும் பயமுறுத்துகின்றனர். பதிவு பத்திரத்தில் உள்ள விலைக்கு மேலாக ஒருவர் பணம் கொடுத்து வீடோ நிலமோ வாங்கினால், அதை அவர் தான் ஈட்டிய பணத்திலிருந்து தான் வாங்கினார் என தனது வருமானவரி தாக்குதல் பத்திரத்தில் குறிப்பிட்டால் ஒன்றும் குற்றமில்லையே. இப்படி செய்கையில் அவர் தான் சம்பாதித்த பண விவரங்களை அவர் வருமான வரி துறைக்கு காட்டுகிறார் என்றுதானே அர்த்தம். ஒருவர் முத்திரை காகித விலைக்கு மேலாக விற்றால் விற்கப்படும் நிலமோ வீடோ சந்தையில் அந்த அளவுக்கு விலை போகிறது என்றுதானே அர்த்தம். மற்ற எல்லா பொருள்களும் சந்தையில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப மதிப்பீடு செய்யப்பட்டு விற்கப்படும்போது அதே சந்தை சூழ்நிலை தானே நிலம் வீடு வாங்கவும் விற்கவும் அடிப்படையாக அமைய வேண்டும். சந்தை சூழ்நிலை நிலவரத்திற்கேற்ப இதர பொருள்களை விற்கும் வாங்கும் முறையை ஆதரித்து ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம், நிலம் வீடு போன்ற சொத்துக்களை விற்க வழிவகை கூறும் சட்ட திட்டங்களிலும் நிறைவேற்றுவது உசிதம் என்பது என் எண்ணம். இதனால் கருப்பு பண புழக்கம் குறைவதோடு மக்களின் நேர்மையும் அதிகரிக்கும். கருப்பு பண புழக்கத்தை கடுமையாக ஆட்சேபிக்கின்ற வருமானவரி துறையும் அரசாங்கமும் இணைந்து நிலம் வீடு வாங்கும்போது கொடுப்பவர் தான் தர நினைக்கும் முழு பண மதிப்பையும் விற்கும் பதிவு ஆபரணங்களில் பதிவு செய்து அதற்கேற்ப ஸ்டாம்ப் மதிப்பையும் கணிக்க வகை செய்யவேண்டும். அதே நேரத்தில் வாங்குபவர் ஏற்கெனவே உயர்ந்த விலை கொடுத்து நிலமோ வீடோ வாங்குகிறார் என்ற பட்சத்தில், ஸ்டாம்ப் மதிப்பிற்கும் ஒரு உச்ச கட்டணத்தை அமைத்து வாங்குபவரின் கையை அதிகம் கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
லஞ்சம் மற்றும் கருப்பு பணம் இவை குறைந்த சில மனிதர்களால் துவங்கப்பட்டு பின்னர் இரண்டும் சமுதாயத்தில் ஆழ்ந்த கறைகளாக மாறிவிட்டது. இவ்விரண்டு கறைகளை போக்குவது அவ்வளவு எளிய செயல் இல்லை என்பதை இந்த சமுதாயமே அறியும். பணத்தின் மீது இருக்கும் பேராசை குறைந்தால் ஒழிய இந்த கண்ணுக்கு தெரியாத அரக்கர்களை ஒழிக்கமுடியாது என்பதை நான் கூற தேவையில்லை. சமுதாயத்தின் முகமான, வரி கட்டும் ஒவ்வொரு மனிதரும் அறிவார். மனசாட்சி என்கிற கண்ணுக்கு தெரியாத ஆனால் ஒவ்வொருவரும் உணரும் தன்மையை பலர் உணர்ந்து அதன்படி செயல்பட்டிடில், உருவாகக்கூடும் புதியதோர் உலகம், வஞ்சமிலா, லஞ்சமில்லா அன்பு உலகம்.
வஞ்சமில்லா நெஞ்சம் இருப்பின் உண்மை அன்பிருக்கும்
லஞ்சமில்லா பணம் இருப்பின் உண்மை நாணயம் இருக்கும்
ஆனந்த ராம்