வெல்லுங்கள் கவலை பயம் குற்ற உணர்வுகளை

பிரச்சினை என்று எதையும் நினைக்காமல் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டால் எந்த வித பிரச்சனையும் இருக்காது. சவாலை எதிர்க்கும் தைரியம் தானாகவே வந்து விடும். பிரச்சினை என்று கருதுகின்ற எல்லாவற்றையும் சவாலாக ஏற்று எதிர்த்து போராடும்போது வெற்றி கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம். சில சவால்களை சந்திக்கையில் வெற்றி கிட்டாது. ஆனால் பிரச்சினையாக இருந்த ஒன்றை நாம் நம்மை அறியாமல் நிச்சயமாக கடந்து விடுவோம். ஒரே விதமான பிரச்சினையை மீண்டும் மீண்டும் கடக்கும்போது அது பிரச்சினையாக இருக்காது. மற்ற விஷயங்களை போல அதுவும் ஒரு நிகழ்வாக அமைந்து மறையும். எப்படி ஒவ்வொரு முறையும் கனமழை விடாமல் பெய்தால் விளையப்போகும் நிகழ்வுகளை நினைத்து பயந்து போகிறோமோ, அதுபோல. கனமழையால் கடும்விளைவு ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு அடுத்த மழைக்கு நம்மை தயார் செய்துகொள்வதை போல.

கவலை என்பது நாம் பிரச்சனையோ துன்பமோ தாளாமல் படுவது தான். ஒருவர் தன உயிர்போன்ற ஒருவரை இழந்துவிட்டால் நிச்சயம் கவலைதான். நம் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டதென்றால் அதுவும் கவலைதான். ஆனால் போன உயிர் எதுவும் திரும்பிவந்த சரித்திரம் இல்லை என்பதால் அந்த கவலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் வெளியேறித்தான் ஆகவேண்டும், நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால். உடல் நலன் பாதிக்கப்பட்டால் கவலையுடன் இருந்தால் உபயோகம் சிறிதும் இல்லை. எவ்வாறு வாழ்ந்தால், என்ன மருத்துவ சிகிச்சை எடுத்தால் நாம் உடல் நல பாதிப்பை மீண்டும் சீர்செய்து அல்லது அதன் பாதிப்பை குறைத்து வாழ முடியும் என்பதில் கவனம் செலுத்தினால் அதனால் நேர்மறையான மாற்றம் அமைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நேரங்களில் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியம். எதை செய்கையிலும் நம்பிக்கையுடன் செய்தால் அதன் விளைவுகள் நமக்கு ஏதுவாக அமைய வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஒரு வேளை நம்மால் செய்ய முடிந்தவைகளை சரியாக செய்த பின்பும் உடல் நல பாதிப்பில் ஒன்றும் மாற்றம் இல்லை என்றால், அதே விதமான உடல்நலத்துடன் தைரியத்துடனும் துணிச்சலாகவும் வாழ தெரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எவ்வளவோ பேருக்கு எவ்வளவு தீங்கு தரும் உடல் உபாதைகள் வந்து அவைகளுடன் ஒருவர் எப்படி போராடி வெற்றி பெற்று மீண்டும் உடல் நலம் பெற்று வாழ்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம். குறிப்பாக புற்றுநோய் தாக்கி பாதிக்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்று அதனுடன் போராடி மீண்டும் ஒரு புது வாழ்வு வாழ்பவர்கள் எத்தனை பேர். ஏன், சராசரி மனிதர்களில் எவ்வளவு பேர் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய், இருதய கோளாறுகளுடன் எவ்வளவோ மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றில் மனதை செலுத்துகிறார்கள். அது எதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது, ஒரு கலையில் ஈடுபடுவது, பாடுவது, கதை எழுதுவது, நிறைய நண்பர்களுடன் கூடி அரட்டை அடிப்பது, இதில் எதுவும் இல்லையா, தொலை காட்சி பெட்டிக்குள் நுழைந்து தன்னை மறப்பது, செல் போனை வைத்துக்கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்வது, இது போல எதாவது ஒரு தனக்கு பிடித்த காரியத்தை செய்கையில் கவலை, பிரச்சினை , பயம் போன்ற எதிர்மறைகளிலிருந்து அவர்கள் தம்மை காத்துக்கொள்கின்றனர். அதானால் அவர்கள் உடல் உபாதைகள் இருப்பினும் , மருந்து மாத்திரை எடுத்து கொண்டு, கொஞ்சம் உணவில் அக்கறை எடுத்துக்கொண்டு 80 வயதை தாண்டியும் வாழ்கின்றனர்.

ஒரு வித பயத்திலிருந்து பிறப்பது தான் கவலை. கடந்தகால வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், நடந்து கொண்டிருக்கும் சில நிகழ்ச்சிகள், நாளை எப்படி இருக்குமோ என்ற பயம் கலந்த சந்தேகம் இவை தான் பயத்தின் வேர்கள். தன்னுடைய மனசாட்சிக்கு( ஒருவேளை அவருக்கு அது இருப்பது தெரிந்து) எதிராக ஒருவர் ஈடுபட்டால் அத்தகைய நிகழ்ச்சி அந்த தருணத்தில் இல்லாமல் வருங்காலத்தில் ஒரு நாள் திடீரென ஒரு பயத்தையும் ஏன் ஒரு வித குற்ற உணர்வையும் தூண்டி விடும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான் செய்த சில தவறுகள் நாற்பது ஆண்டுகள் கழித்து ஒருவித குற்ற உணர்வினை எனக்குள் ஏற்படுத்தி, அதன் தயக்கத்துடன் நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்துள்ளேன். இதன் தாக்கம் என்னை பலவிதமான உடல் உள்ள உபாதைகளுக்கு ஆளாக்கியது உண்மை. ஆனால் பயம் குற்ற உணர்வு என்று ஒளிந்து ஓடாமல் நான் அவைகளை நேருக்கு நேராக என் மனக்கண் முன் நிறுத்தி " ஆமாம். அந்த நேரத்தில் இது போன்று நிகழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால் அவ்வித சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். ஆனால் இவை நடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதை நாம் மாற்ற முடியாது . ஆனால் வரும்காலத்தில் இதுபோன்ற குற்றவுணர்வை தரும் காரியங்களை நான் கண்டிப்பாக செய்யமாட்டேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டு, என்னை தியானம் மற்றும் மௌனத்துடன் அதிகம் ஈடுபடுத்திக்கொண்டேன். சாதாரணமாக இல்லை, மிகுந்த மன உறுதியுடன், மன அழுத்தத்தையும், எரிச்சலையும், விரக்தியையும் என் உள்ளுக்குள் கண்டு , அவைகளை நேருக்கு நேர் எதிர் கொண்டு, நிகழ் காலத்தில் வாழ்வது தான் உண்மையான வாழ்வு என்ற படித்த கேட்ட தத்துவத்தை நடைமுறை படுத்தி என்னை எவ்வளவோ மாற்றம் நிறைந்த புது மனிதனாக மாற்றிக்கொண்டு விட்டேன். நான் 95 % நல்லவை செய்து 5 % எனக்கு தீயவையாக தோன்றுவதை செய்திருப்பினும், 95 % நேரம் நான் செய்த 5 % தவறுகள் தான் அதிகமாக மனக்கண் முன் வருகிறது என்பதையும் நான் கண்டுகொண்டேன். இது மனிதனின் சுபாவம் கூட என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியான நிகழ்வுகளை விட, கசப்பான நினைவுகள் தான் நம் எண்ணத்தில் அடிக்கடி தோன்றி மறையும். தோன்றி மறையும் என்ற வாக்கிய தொடரில் தான் சிறந்த விடையும் இருக்கிறது. ஆமாம், தோன்றியது மறையும். மறைந்த பின் மீண்டும் மகிழ்ச்சி. மீண்டும் எப்போதோ தோன்றும், ஆனாலும் நிச்சயம் மறைந்து விடும். நம் எண்ணங்களில் எதுதான் நிலையாக இருக்கிறது, சொல்லுங்கள்? நல்ல கூர்மையாக விழிப்புணர்வுடன் கவனிக்கையில் நம் மனது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் கண்டு விடமுடியும். அதன் பின் அதற்கு ஏற்றமாதிரி நம் மனதை ஜாக்கிரதையாக கையாளவேண்டும். எப்போதிலிருந்தோ நாம் கேட்டு வரும் பழமொழி " மேகங்கள் ஒருபோது நிலைத்து இருப்பதில்லை". அவை தோன்றி தோன்றி மறைந்து விடுகிறது. நம் எண்ணங்களும் மேகங்களை போலத்தான். திடீரென்று ஒருவித பயம் கவலை தரும் எண்ணம் வந்து அலை மோதும். அதை கவனிக்காமல் விட்டால் மீண்டும் ஒருமுறை வந்து உதிக்கும். அத்தகைய எண்ணங்களை நாம் விழிப்புணர்வுடன் கூர்ந்து கவனித்தால் அவை வந்த வேகத்திலேயே போய் விடும். மீண்டும் வந்தாலும் அதன் முன்பிருந்த தீவிரம் நிச்சயம் இருக்காது. வேதனை மற்றும் பயம் தரும் எண்ணங்கள் வருகையில் " இதுவும் கடந்து விடும்" என்ற புத்தரின் அருமை உரையை மனதில் வைப்போம். மகிழ்ச்சி நிறைந்து இருக்கையில் அந்த நிலையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் லயித்திருக்க முயல்வோம். அதிக நேரம் , அதிக நாட்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ இதுதான் எனக்கு மிகுந்த உகந்த சிறந்த உபாயமாக தோன்றுகிறது. உங்களுக்கு எப்படியோ?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Jan-22, 4:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே