ஏம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை சாம்போழ் தலறுந் தகைத்து – இன்னிலை 18

இன்னிசை வெண்பா

ஆம்போம் வினையா னணைவுற்ற பேர்வெறுக்கை
ஓம்போம் பெனமறை கூறத் தலைப்பெயலென்
ஏம்போம் எனவரைதல் ஈட்டுநெறி தேராமை
சாம்போழ் தலறுந் தகைத்து 18

– இன்னிலை

பொருளுரை:

பொருள் முற்பிறப்பிற் செய்த வினை காரணமாக உண்டாகும் பின்பு அழிந்துபோகும். அப்பொருளுக்கு சேர்ந்த பெயர் வெறுக்கையாம். ஒழித்துவிடு ஒழித்துவிடு என்று வேதங்கள் கூறவும் அப்பொருளைச் சேர்ப்பது என்ன காரணம்?

பொருளீட்டி களிப்படையோம் நாம் என்று கூறி அதனை நீக்குவது பொருள் சேர்த்து இன்பம் துய்க்கும் வழியறியாமையே யாகும். அது இறக்கும்போது வருந்தியழுந் தன்மை யுடையது.

கருத்து:

ஆம் போது ஆம் போம்போது போம் என்று எளிதாகச் செல்வத்தைக் கருதி இளமைப் பருவத்தில் தேடாமலிருந்தால் இறக்கும்போது மனைவி மக்களைக் குறித்து வருந்த வேண்டியது நேரிடும்.

விளக்கம்:

வினை என்பது நல்வினை, தீவினையிரண்டினையும் உணர்த்தியது. நல்வினையால் ஆம் தீவினையாற்போம் எனக் கூட்டுக.

அறிஞர் வெறுத்தலால் செல்வத்திற்கு "வெறுக்கை" என்ற பெயர் வந்தது.

ஓம்பு என்பது காத்தலுக்கும் கூறலாம். ஆயினும் இடம் நோக்கி ஒழி என்று பொருள் கூறப்பட்டது.

அடுக்கு வினாவைக் குறித்து நின்றது. விரைவில் ஒழித்துவிடு என்பது குறிப்பு.

இவ்வாறு மறை கூறவும் நாம் தலைப்பெயலென் ஏம்போம் என்பது ஒருவர் கூற்று. தன்மைப் பன்மையாகக் கூறினர் எனக் கொள்க.

வரைதல் - பல பொருள் ஒரு சொல்லாயினும் இங்கு நீக்குதல் என்ற பொருளைத் தந்தது. பொருளீட்டுந் தொழிலை நீக்குவது என்க.

பொருள் தேடும் வழி தெரியாமலே இருப்பதன்றி அது அறிஞர் செயலாகாது என்பார் "தேராமை" என்றார்.

இறக்கும்போது மனைவி மக்கள் பொருள் இன்றி வருந்திப் பின்னாளில் என் செய்வாரோ என்று நினைத்து அவர்கள் முகத்தை நோக்கி, நோக்கிப் புலம்புவார் 'என்பது தோன்ற "சாம்போழ்தலறும் தகைத்து" என்றார்.

குறிப்பு:

ஓம்பு+ஓம்பு+என்பன: ஓம்போம்பெனக் குற்றியலுகரங் கெட்டுப் புணர்ந்தன.
ஏம்போம்-தன்மைப் பன்மையெதிர் மறைவினை முற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-22, 8:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே