இழவன்று எருதுண்ட உப்பு - பழமொழி நானூறு 38

நேரிசை வெண்பா

உற்றான் உறாஅன் எனல்வேண்டா; ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க; - கற்றான்
கிழவனுரை கேட்கும்; கேளா னெனினும்
இழவன் றெருதுண்ட உப்பு. 38

- பழமொழி நானூறு

பொருளுரை:

தமக்கு உறவினன் உறவல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை; காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவாற் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க;

கல்வியறிவாற் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான், கேளா தொழிவா னாயினும் காளை உண்ட உப்பு நட்டமாகாமை போலப் பயன்கொடாது ஒழியான் என்பதாம்.

கருத்து:

நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும் கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்க வேண்டும் என்பதாம்.

விளக்கம்:

கொள் முதலியவற்றை உப்பிட்டு உண்பிப்பது நோயைத் தவிர்த்து எருதுக்கு உரஞ்செய்வதால், எருது சலிப்பின்றித் தலைவனுக்கு வேலை செய்யும். அதுபோல் கற்றவன் காரியம் செய்யும்போது அவனுக்கு ஈந்த பொருள் நட்டமாகாமல் தலைவனுக்கு இலாபத்தையே உண்டாக்கும்.

'இழவன்று எருதுண்ட உப்பு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-22, 5:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே