இறக்குமை யாட்டை உடம்படுத்து வௌவுண்டா ரில் - பழமொழி நானூறு 39

நேரிசை வெண்பா

நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
காட்டிக் களைது மெனவேண்டா - ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்! இறக்குமை யாட்டை
உடம்படுத்து வௌவுண்டா ரில். 39

- பழமொழி நானூறு

பொருளுரை:

குழையை அலைத்து (விளங்கும்) அகன்ற கண்களை உடையாய்!

இறக்கும் நிலையிலுள்ள காராட்டை ஒத்துக் கொள்ளச் செய்து அதன் சம்மதத்தின் பேரில் குருதிகொண்டார் உலகத்தில்லை;

ஆகையால், தம்மாலே தங்காரியத்தின் பொருட்டு தேடி வைத்துக் கொள்ளப்பட்டவர்கள் நன்மையைச் செய்தல் இலராயின் அவரிடத்து அதனை எடுத்துக்காட்டி அவர் உடன்பாடு பெற்றுச் செயலினின்றும் நீக்குவோம் என்று நினைக்க வேண்டாம்.

கருத்து:

தம்மால் நிலைநாட்டப்பட்டார் தமக்கு நன்மை செய்யாராயின் அவரிடம் சொல்லாதே அவரை நீக்குதல் வேண்டும்.

விளக்கம்:

காராடு - வெள்ளாடு. ஆடு தான் இறந்து போவதை உறுதியாக அறிந்திருப்பினும், இறப்பதற்கு முன்பு மனமொப்பித் தன்னைப் பிறர் வௌவ இயையாது.

அதுபோல, நம்மால் நாட்டிக் கொள்ளப்பட்டாரும் அவர் செய்த குற்றத்தை எடுத்துக் காட்டி நீக்க நினைப்பின் நீங்கார். பலப் பல கூறிப் பின்னரும் அச்செயலைச் செய்யவே முற்படுவர். ஆதலால், அவரிடங் கூறாதே நீக்குகவென்பதாம்.

'உடம்படுத்து' என்றதற் கேற்ப அவர்க்கு எடுத்துக்காட்டி அவர் உடன்பாடு பெற்று என்று பொருளுரைக்கப்பட்டது.

‘உடம்படுத்து வௌவுண்டா ரில்’ என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-22, 7:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே