அணையும் விளக்கு பேசுகிறது

நான் பிறருக்கு
ஒளி கொடுக்கப்
பிறந்தவன்

ஆனால்
என்னை உலகம்
இருட்டில் மட்டுமே
வைத்து அழகு பார்த்தது

திரியனைதான்
என் அரியணை

யாரும் அறியவில்லை
அவர்கள்
எண்ணெய் ஊற்றினாலும்
என்னை எரித்துத்தான்
பிறருக்கு ஒளி
கொடுத்தேன் என்பதை

என்னை சிலர்
வாசலில் வைத்தார்கள்
பூசை அறையில் கூட
வைத்தார்கள்
யாரும் மனதில்
வைக்கவில்லை


நான் அணைந்து
அமைதி ஆகும் போது
எரிக்க மட்டுமே
என்னை இரு
விரல்கள் தூக்கிவிட்டது


சிலர் கோபுரத்தில்
வைத்தார்கள்
சிலர்
குடிசையில்
வைத்தார்கள்


என்னுள் எரிந்த
வெப்பம் கூட
யாரையும்
சுட்டதில்லை

என் ஒளியில்
சிலர் படித்தார்கள்
சிலர் குடித்தார்கள்


பலரின் நன் முகங்களை
உலகம் பார்க்க வெளிச்சம்
கொடுத்தவன் நான்

வாழ்க்கை என்னை
எண்ணெயை நோக்கி
அணைக்க இழுத்த
போதெல்லாம்
இயன்றவரை மேல்நோக்கி
மட்டுமே எரிந்தேன்

இறைவனே
விளக்கோடு வீதியில்
எறிந்தார்.
விழுந்து எழுந்து
உடைந்து போனாலும்
எரிந்தேன்

அணைக்க வந்தார்கள்
யாரும் ஆதரவாய்
அணைக்க வரவில்லை


என் கண்ணீர்த் துளிகளுக்கு
எரியும் சக்தி கொடுத்து
கடவுள் தினம் தினம்
அழகு பார்த்தார்

நான் அணையும்
விளக்கு என்பது
அறியாது சிலர்
என் பிரகாசத்தை
கண்டு வியந்தனர்

எழுதியவர் : Kumar (6-Jan-22, 10:56 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 357

மேலே