பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை - பழமொழி நானூறு 40

நேரிசை வெண்பா
(அகரத்திற்கு ஐகாரமும், ஔகாரமும் அனு எதுகை)

பயனோக்கா தாற்றவும் பாத்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப!
கூலிக்குச் செய்துண்ணு மாறு. 40

- பழமொழி நானூறு

பொருளுரை:

வெற்றியையுடைய குதிரையைப்போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே!

மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி, மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி, புகழொன்றனையே நோக்கிக் கொடுக்கின்றவர்களது ஈகை கூலிக்குத் தொழில் செய்து உண்ணு நெறியோடு ஒக்கும்.

கருத்து:

புகழொன்றனையே நோக்கிக் கொள்வோர் நிலையறியாது கொடுக்கும் கொடை சிறந்ததன்றாம்.

விளக்கம்:

'பாத்தறிவு ஒன்று இன்றி' என்றது வறியோர் அவரல்லாதோர் என்று பகுத்துணர்தலின்றிப் புகழ் ஒன்றனையே கருதி ஈதலை. அங்ஙனம் ஈதல் புகழ் பயக்குமாயினும், மறுமையின்பத்தைக் கொடாது ஒழிதலேயன்றி ஈகை யெனவும் படாது என்பதாயிற்று.

'ஈகின்றார் ஈகை' என விதந்ததும் இதன் பொருட்டே! வயமா புலியெனப்படினும், குதிரைகளுக்கு அஃது உவமையாக நூலாட்சியுள் இன்மையான், குதிரை யென்றே கொள்க.

புகழ் ஒன்றனையே கருதிப் பகுத்துணர்வு இன்றி ஈதல், கூலிக்கு வேலை செய்வார் செயல் எத்தகையதாயினும் அதைக் கருதாது செய்தலை ஒக்கும்.

'கூலிக்குச் செய்து உண்ணுமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-22, 7:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே