இளமையுண் மூப்புப் புகல் இன்னா - இன்னா நாற்பது 27

இன்னிசை வெண்பா

பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்1 களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல். 27

- இன்னா நாற்பது

பொருளுரை:

பெருமையுடையவரை அவர்தம் பெருமை அழியும்படி செயல்படுவது துன்பமாகும்;

உரிமை உடைய நண்பர்களை கீழாக எண்ணி நடத்துவதும், அவரை விட்டு நீங்குவதும் துன்பமாகும்;

செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாகும்;

இளமைப் பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் உண்டாவது துன்பம் தருவதாகும்.

பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மையெய்தி இரண்டாவதற்கு மடிபாயின. பீடழித்தலாவது பெருமையுளதாகவும் அதனை யிலதாக்கிக் கூறுதல்.

கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமையுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு;

பழைமை யெனப்படுவ யாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801

என்னும் திருக்குறளும் காண்க. வளமை வண்மையுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-22, 11:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே