தீ இல்லை ஊட்டும் திறம் - பழமொழி நானூறு 45

இன்னிசை வெண்பா

நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவின் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுஅன்றோ
தீஇல்லை ஊட்டும் திறம். 45

- பழமொழி நானூறு

பொருளுரை:

பூவைவிட அழகாக விளங்குகின்ற விசாலமான கண்களை உடையவளே!

மனம் வருந்துமாறு அடாத சொற்களைச் சொல்லியவர்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் தமது நாவினால் தம்மை இகழ்ந்தாரை பதிலுக்கு வைதால், அது தீயினால் தம் வீட்டினைக் கொளுத்தும் செயல் போல் ஆகும் அல்லவா?

கருத்துரை:

தம்மை இகழ்ந்தாரைத் தாமும் இகழ்தல் தமக்குத் துன்பத்தை விளைவித்துக் கொள்வதாக முடியும்.

விளக்கம்:

இயல்பாகவே பிறரை இகழும் குணமுடையாரைத் தாம் சினந்து கூறி அதனால் அவர்க்குச் சினமூட்டுவது, எரியும் தன்மையை உடைய கூரை வீட்டில் தீ வைத்ததற்கு ஒப்பாகும்.

தாம் சினந்து கூறியதைப் பற்றுக் கோடாகக் கொண்டு, மேலும் தீங்கு விளைக்க அவர் முற்படுவர்.

தீ இல்லை ஊட்டும் திறம் என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே